2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 13:13 [IST] Share This Article
நடப்பு ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயமாக திகழ்கிறது. தொழில் செய்வது இனி சுமையல்ல என்ற இலக்கோடு அரசு மற்றும் செபி, ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளன. இதில் பலவும் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் துறையில் 100% அந்நிய முதலீடுகள், வங்கிச் சட்டங்களில் பல மாற்றங்கள், 1000-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களை நீக்கியது என கட்டுப்பாடுகளைத் குறைத்து, வளர்ச்சியை விரிவு படுத்தும் விதமாக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் இருந்தன. அரசின் இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் வருங்காலத்திற்கு எந்த வகையில் உதவும் என்பதை பார்க்கலாம்.

முக்கிய முடிவுகள்?
நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட மிக முக்கிய மாற்றங்களில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் முதல் தொழிலாளர்கள் நல சட்டம் வரையில் பலவும் அடங்கும். இது பலவற்றின் மீதான வரியை குறைக்க வழிவகுத்தது. சொல்லப்போனால் பல துறையினருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. மேலும் அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கியது, குற்றவியல் நடவடிக்கைகளில் சிறு பிழைகள் மற்றும் விதிமீறல்களை நீக்கி, அபராதங்களாக மாற்றியது. மேலும் கெமிக்கல்கள் மற்றும் ஜவுளித் துறைகளில் இருந்த தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் திரும்ப பெறப்பட்டன.
முக்கிய சட்ட மாற்றங்கள்?
ஜன் விஸ்வாஸ் 2.0 (Jan Vishwas 2.0): 17 சட்டங்களைத் திருத்தி, மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான சிறு குற்றங்களுக்கான தண்டனையை அபராதமாக மாற்றியது.
இன்சூரன்ஸ் மற்றும் அணுசக்தி: காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு (FDI) 100% ஆக உயர்த்தப்பட்டது. சாந்தி (SHANTI) மசோதா மூலம் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பிற்கு வழிவகை செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தம்: ஜிஎஸ்டி பதிவு 3 நாட்களில் கிடைக்கும் வகையில் எளிதாக்கப்பட்டது. சிக்கல்களை குறைக்க மூன்று அடுக்கு வரி விகிதங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
தொழிலாளர் சட்டங்கள்: 29 பழைய சட்டங்கள் 4 குறியீடுகளாக மாற்றப்பட்டன. நிறுவனங்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 84-லிருந்து 8-ஆக குறைக்கப்பட்டது.
நிதித் துறையில் மாற்றங்கள்?
ஆர்பிஐ (RBI): 9,000-க்கும் மேற்பட்ட சுற்றறிக்கைகளை ரத்து செய்து, அவற்றை வெறும் 244 எளிமையான வழிகாட்டுதல்களாக மாற்றியது.
செபி (SEBI): பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்குள் மேற்கொள்ளும் வர்த்தகப் பரிமாற்றங்களுக்கான (RPT) விதிகளை தளர்த்தியது. பங்குச் சந்தை தரகர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் விதிகளையும் எளிதாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு (DPDP): கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின்படி, தனிநபர் தரவுகளைக் கையாளும் நிறுவனங்களுக்கான (Data Fiduciaries) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, எளிமை படுத்தப்பட்டுள்ளன.
2026-ல் எதிர்பார்க்கப்படுபவை (நிதி ஆயோக் பரிந்துரை):
சிறு நிறுவனங்களுக்கான (MSMEs) சமூகப் பொறுப்புணர்வு (CSR) கட்டாயத்தை நீக்குதல், சிறிய நிறுவனம் என்பதற்கான வரம்பை 100 கோடி ரூபாய்க்கும் மேலாக உயர்த்துதல்.
ஜிஎஸ்டி தாமத கட்டண வட்டியினை 18%-லிருந்து 12%-ஆகக் குறைத்தல்.
புதிய தொழில் தொடங்குவதற்கான ஆவணங்களைக் குறைத்தல் மற்றும் மாநில அளவில் நிலம்/சுற்றுச்சூழல் அனுமதிகளை எளிதாக்குதல்.
மேற்கண்ட பல்வேறு மாற்றங்கள் சட்ட ரீதியாக கொண்டு வரப்பட்டாலும், அவை முழுமையாக செயல்படுத்தப்படும் போது மட்டுமே தொழில் துறையில் உண்மையான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது தான், அதன் பலனும் தெரிய வரும்.
Share This Article English summary
Is 2025 the Year of Economic Freedom? How India’s Massive Deregulation Reforms are Changing for Investors?
In 2025, India dismantled outdated rules via the Four Labour Codes and a Deregulation Commission. Major banking and insurance reforms replaced regulatory fear with a true Ease of Doing Business. Story first published: Monday, December 22, 2025, 13:13 [IST] Other articles published on Dec 22, 2025
