4 ஆண்டு சரிவில் அமெரிக்க டாலர்! கவலைப்படாத டிரம்ப்? உலகையே அதிரவைத்த அதிபரின் ஒற்றை கமெண்ட்!
World oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Friday, January 30, 2026, 12:46 [IST] Share This Article
டாலர் சரிந்தால் அமெரிக்க பொருளாதாரமும் சரிந்துவிடும் என்ற உலக பொருளாதார நிபுணர்களின், பொதுவான கவலையை தனது ஒற்றை கமெண்ட் மூலம் தவிடு பொடியாக்கி இருக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க டாலர் குறியீடு அதன் மிக குறைந்த அளவான 95.56-க்கு சரிந்துள்ள நிலையில், இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இது மிகச்சிறந்த விஷயம் (I think it’s great) என்று டிரம்ப் கூலாக பதிலளித்துள்ளது உலக நிதி சந்தையை அதிர வைத்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு வீழ்வது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும். ஆனால் டிரம்ப்பின் அமெரிக்கா பர்ஸ்ட் (America First) கொள்கையின்படி, பலவீனமான டாலர் என்பது அமெரிக்க பொருட்களின் ஏற்றுமதியை உலகளவில் மலிவாக்கி, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தக போரில் வெற்றி பெற உதவும் ஒரு ராஜதந்திரமாகும். டாலர் சிறப்பாக செயல்படுகிறது என டிரம்ப் அயோவாவில் கூறிய அதே நேரத்தில், சந்தையில் டாலரின் மதிப்பு மேலும் சரிந்தது. டிரம்பின் இந்த துணிச்சலான நிலைப்பாடு அமெரிக்க உற்பத்தி துறைக்கு புத்துயிர் அளிக்குமா அல்லது உலகளாவிய பணவீக்கத்தை இறக்குமதி செய்யுமா என்ற விவாதத்தை இப்போது கிளப்பியுள்ளது. இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

இது சிறந்த விஷயம்!
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (ஜனவரி 27, 2026), அமெரிக்க டாலர் குறியீடு பிப்ரவரி 2022-க்குப் பிறகு அதன் மிகக் குறைந்த அளவை தொட்டது. புதன்கிழமை (ஜனவரி 28) காலை நிலவரப்படி, டாலர் குறியீடு 96.2 புள்ளிகளில் வர்த்தகமானது. இது 1973-ஆம் ஆண்டின் அடிப்படை அளவான 100-க்கும் குறைவாகும். இப்படி டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், இது மிகச்சிறந்த விஷயம் (I think it’s great) என்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து அயோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், டாலரின் மதிப்பை பாருங்கள்-நாம் செய்துகொண்டிருக்கும் வர்த்தகத்தை பாருங்கள். டாலர் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று நியூஸ்வீக் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிபுணர்களின் எச்சரிக்கை?
2025-ஆம் ஆண்டின் முதல் வாரங்களிலிருந்தே டாலர் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்து மியாமி பல்கலைக்கழகத்தின் ஹெர்பர்ட் பிசினஸ் ஸ்கூல் பொருளாதாரப் பேராசிரியர் மைக்கேல் கான்னோலி கூறுகையில், அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை மற்றும் தொடர்ச்சியான பணவீக்கம் ஆகியவை சர்வதேச அளவில் டாலர் மீதான நம்பிக்கையை சிதைத்துள்ளன. குறிப்பாக, பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான இடமாக டாலர் கருதப்படுவது குறைந்து வருகிறது என எச்சரித்துள்ளார்.
இது தான் காரணமா?
கிரீன்லாந்து விவகாரத்தில் நிலவும் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின் விற்பனை ஆகியவை சில காரணங்களாக கூறப்பட்டாலும், டாலர் இன்னும் கணக்கீட்டு அலகாகவும், உலகளாவிய பரிமாற்ற அம்சமாகவும் முதன்மையான இடத்தில் உள்ளது.
இதேபோன்று கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் சர்வதேச ஆய்வுகள் பேராசிரியர் ரையன் சாஹ்ரர் கூறுகையில், கடந்த சில வாரங்களில், குறிப்பாக கிரீன்லாந்து தொடர்பான விவாதங்களில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தான் நிலைநிறுத்தி வந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உலக ஒழுங்கை கைவிட அமெரிக்கா தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி 16 முதல் அமெரிக்க டாலரின் வீழ்ச்சியும், தங்கத்தின் விலை உயர்வும் அதற்கான விளைவாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
இருப்பினும் பொருளாதார நிபுணர்கள், அமெரிக்காவின் பொருளாதார கொள்கையில் நிலவும் அதிகப்படியான நிச்சயமற்ற தன்மை, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அமெரிக்க கருவூல பத்திரங்களில் வைத்துள்ள முதலீடுகளை குறைக்கத் தூண்டியுள்ளது. மேலும், மத்திய வங்கியின் சுதந்திரத்திற்கு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களும் சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது என கூறுகின்றனர்.
Share This Article English summary
How did President Trump react when the U.S. dollar hit a four-year low in January 2026?
In January 2026, Trump called the dollar’s four-year low “great,” claiming it boosted business volume and trade competitiveness despite the currency’s significant decline. Story first published: Friday, January 30, 2026, 12:41 [IST]
