ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை?
Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 16, 2025, 9:22 [IST] Share This Article
இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக உற்பத்தியை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பல திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமான திட்டம் உற்பத்தி சார்ந்த பிஎல்ஐ ஊக்கத் திட்டம் தான். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசு, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஸ்பெஷாலிட்டி ஸ்டீலுக்கான மூன்றாவது சுற்று பிஎல்ஐ (PLI) திட்டத்தில், எம்.எஸ்.எம்.இ -க்கள் நுழைவதை எளிதாக்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ -க்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டின் உயர்தர ஸ்டீல் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்காவும் வைத்துள்ளது.

புதிய வாய்ப்புகள்!
அரசின் இந்த நடவடிக்கையானது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் இறக்குமதியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசின் இந்த திட்டமானது இந்திய நிறுவனங்கள் உலகளாவிய அளவில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது இந்தியாவை தற்சார்பு கொண்டதாகவும், உலக அளவில் போட்டியிடும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாகவும் மாற்றும். இந்த திட்டம் விண்வெளி, பாதுகாப்பு துறை, எரிசக்தி துறை, ஆட்டோமொபைல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படும் உயர் மதிப்புள்ள ஸ்டீல் உற்பத்தியை ஊக்குவிக்க அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட முதல் இரண்டு சுற்றுக்களின் மூலம் 43,874 கோடி ரூபாய் முதலீடானது செப்டம்பர் 2025ம் ஆண்டு நிலவரப்படி ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30,760 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முந்தைய சுற்றுக்களின் மூலம் சூப்பர் அலாய்கள், CRGO எஃகு, துருப்பிடிக்காத எஃகு மற்றும் பிளாட் தயாரிப்புகள், டைட்டானியம் அலாய்கள் போன்ற பல அடுத்த தலைமுறை தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்குத் தேவையான மேம்பட்ட மற்றும் வளர்ந்து வரும் வகைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் இந்த மூன்றாவது சுற்று, முந்தைய கட்டங்களைத் தொடர்ந்து தங்கள் திறன்களை விரிவுபடுத்திய அல்லது மேம்படுத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் ஏற்கனவே உள்ள உற்பத்தியாளர்களுக்கு புதிய வழிகளைத் திறக்கலாம். இது சர்வதேச சந்தையில் இந்திய உற்பத்தியாளர்களை அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலுவான ஸ்டீல் உற்பத்தியாளர்!
இந்தியா தொடர்ந்து வலுவான ஸ்டீல் உற்பத்தியாளராக சர்வதேச அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு இந்திய அரசின் பிஎல்ஐ திட்டமும் முக்கிய காரணமாகும். தொடர்ந்து ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வரும் இந்திய நிறுவனங்கள், இதன் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் பங்கை வலுவானதாகவும், நிரந்தரமானதாகவும் மாறலாம்.
மூன்றாவது சுற்றை பொறுத்த வரையில் மூன்று அம்சங்கள் மையமாக பார்க்கப்படுகிறது.
1. ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சி: உள்நாட்டு தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளது. இது உற்பத்தி நிறுவனங்களின் வளார்ச்சிக்கு சாதகமாக அமையும். இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
2. தொழில்நுட்பத்தில் புதுமை: உற்பத்தியை வெறுமனே பெருக்கினால் மட்டும் போதாது. உற்பத்தி செயல்முறைகளில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
3. உற்பத்தியில் நிலைத்தன்மை: ஸ்டீல் உற்பத்தியால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைத்து, உற்பத்தியை நிலையாக வைத்துக் கொள்ள நடவடிக்கை பின்பற்றுதல். இது உற்பத்தியையும் நிலையாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும்.
சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க செல்போன், மின்னணு சாதன உற்பத்தி உட்பட மொத்தம் 14 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் துறை வாரியான குறைகளை நீக்குதல், உற்பத்தி வாய்ப்புகளை உருவாக்குதல் & பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை தான் பிஎல்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன. ஏற்கனவே அதை வெற்றிகரமாக பல துறைகளில் செயல்படுத்தியுள்ள அரசு, ஸ்டீல் துறையிலும் மாபெரும் இலக்கை அடையலாம். இது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையலாம்.
Share This Article English summary
What is the significance of the third round of the specialty steel PLI scheme for MSMEs?
What is the significance of the third round of the specialty steel PLI scheme for MSMEs? Story first published: Sunday, November 16, 2025, 9:22 [IST] Other articles published on Nov 16, 2025