NPS-ல் முதலீடு செய்தோருக்கு ஹேப்பி நியூஸ்..! Annuity விதியில் புதிய மாற்றம்..!
Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 17, 2025, 12:43 [IST] Share This Article
ஓய்வூதிய காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் எதற்கு கெடுபிடி என யோசித்துக் கொண்டிருந்த, NPS சந்தாதாரர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து உள்ளவர்களுக்காக, அதன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியேறும் விதிகளில், புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் என்.பி.எஸ் சந்தாதாரர்கள் இனி 80% வரையிலான கார்ப்பஸ் தொகையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையால் உங்கள் கையில் எவ்வளவு பணம் கிடைக்கும், மற்ற முழு விவரங்கள் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.
மிகப்பெரிய மாற்றம்!
அரசு சாரா ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தளர்வுகளானது மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். ஓய்வு பெறும்போது உங்கள் மொத்த சேமிப்பில் குறைந்தபட்சம் 40% தொகையாவது வருடாந்திர திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதியானது இருந்தது. ஆனால் இது தற்போது 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக எடுக்கும் தொகையானது 80% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையேல் 60 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது வேலையில் இருந்து பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது பூர்த்தி செய்தால் மட்டுமே மேற்கண்ட 80% பணம் எடுக்கும் திட்டம் பொருந்தும்.
100% பணம் எடுக்கும் வசதி?
உங்கள் மொத்த சேமிப்பு தொகையானது 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், நீங்கள் வருடாந்திர திட்டத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. 100% தொகையையும் முழுமையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இதை மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக எஸ் டபிள்யூ பி போன்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு வேளை உங்கள் மொத்த ஓய்வூதிய சேமிப்பானது 8 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், சந்தாதாரர்கள் 6 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு முறையான தவணைகளாக அல்லது வருடாந்திர திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
முன்கூட்டியே வெளியேறினால்?
ஒரு என்.பி.எஸ் சந்தாதாரர் 15 ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே அல்லது 60 வயது ஆவதற்கு முன்பாகவோ வெளியேறினால் பழைய விதிகளே தொடரும். அதாவது மொத்த தொகையில் 80% தொகையை வருடாந்திர திட்டத்தின் மூலமாகவும், 20% தொகையை மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை இதில் மொத்த சேமிப்பானது 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் மட்டுமே முழுத் தொகையும் எடுத்துக் கொள்ள முடியும்.
60- வயதுக்கு மேல் இணைந்தவர்களுக்கு விதிகள்?
60 வயதிற்கு மேல் என்.பி.எஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் சேமிப்பு 12 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருந்தால், முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ளலாம். 12 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 20% தொகையை வருடாந்திர திட்டத்திற்கும், 80% தொகையை மொத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
85 வரை நீட்டிக்கலாமா?
அரசு சாரா ஊழியர்கள் தங்கள் பணத்தை எடுப்பதையோ அல்லது வருடாந்திர திட்டத்தில் பணம் பெறுவதையோ 85 வயது வரையில் தள்ளிப்போடலாம். ஆனால் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு வெளியேறும் வசதி உண்டு. இதில் அரசு ஊழியர்களுக்கான விதிகள் மாற்றம் செய்யப்படவில்லை. ஓய்வுக்குப் பிறகும் 85 வயது வரை என்.பி.எஸ் கணக்கைத் தொடரலாம். ஆனால் வெளியேறும் போது கட்டாயம் 40% தொகைக்கு வருடாந்திர திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். 60% தொகையை மட்டுமே மொத்தமாக எடுக்க முடியும்.
சுருக்கமாக சொன்னால் சாதாரண மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த 80% மொத்தமாக பணம் எடுக்கும் வசதி மற்றும் 8 லட்சம் ரூபாய் வரையிலான 100% பணம் எடுக்கும் வசதி மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
Share This Article English summary
NPS subscribers can now withdraw up to 80% of their funds
New regulations have been notified allowing non-government employees to withdraw up to 80% of their NPS corpus. Story first published: Wednesday, December 17, 2025, 12:43 [IST] Other articles published on Dec 17, 2025
