TCS பங்குகள் அசுர வீழ்ச்சி: பிப்ரவரியில் மட்டும் 14% காலி! இது பயமா அல்லது வாங்குவதற்கான சான்ஸா?
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 23, 2026, 15:56 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தையில் உள்ள முக்கிய பங்கான டிசிஎஸ் (TCS) பங்குகள், பிப்ரவரி மாதத்தில் இதுவரை 14% சரிந்து முதலீட்டாளர்களை நிலைகுலைய செய்துள்ளன. பல ஆண்டுகளாக ப்ளூ சிப் என்ற அந்தஸ்துடன் அசைக்க முடியாத பலத்துடன் இருந்த டாடா குழுமத்தின் இந்த ஜாம்பவான் பங்கு, இன்று ஏஐ (AI) எனும் புயலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
வெறும் ஒரு மாதத்தில் 14% வீழ்ச்சி என்பது சாதாரணமானது அல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை சுருக்கும்போது, சேவை துறையை மட்டுமே நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் சந்தையில் பரவியுள்ளது. 2026-ன் இந்த பிப்ரவரி சரிவு பலரது போர்ட்ஃபோலியோவை சிவப்பாக மாற்றியுள்ளது. இது ஒரு மோசமான சரிவு என்று ஒரு தரப்பு எச்சரிக்கும் வேளையில், அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களோ, விலை குறைவாகக் கிடைக்கும் போது தரமான பங்கை அள்ளுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள். பயந்து ஓடிப் போய் நஷ்டத்தை தவிர்க்க போகிறீர்களா? அல்லது தைரியமாக முதலீடு செய்து லாபத்தை அறுவடை செய்யப் போகிறீர்களா? டிசிஎஸ் பங்கின் தற்போதைய நிலையில் வாங்கலாமா வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.
டிசிஎஸ் நிறுவன பங்கானது தொடர்ந்து ஐந்தாவது வாரமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், ஐடி நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் நிபுணர்கள் எதிர்பார்த்தப்படியே தான் காணப்படுகிறது. குறிப்பாக ஆந்தோரோபிக் போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட ஏஐ கருவிகள், இந்திய ஐடி நிறுவனங்கள் செய்யும் பல வேலையை எளிதாக செய்து முடிக்கின்றன. இதனால் நேரமும் மிச்சம், பணமும் மிச்சம் என்ற நிலையில் உருவாகியிருக்கிறது. மேலும் ஏஐ வேலையை மனிதர்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில் செய்து முடிக்கின்றன. மொத்தத்தில் ஐடி நிறுவனங்களின் வருவாயும் குறையும். வேலை வாய்ப்பும் குறையும். இந்த பயத்தின் மத்தியிலேயே இப்பங்கானது 14% வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
மேற்கொண்டு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தரவுகள் சந்தைக்கு சாதகமாக இருப்பதால், வட்டி குறைப்பு தற்போதைக்கு இருக்காது என்று தெரிகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் புதிய திட்டங்களுக்கு செலவு செய்வதைத் தள்ளிப் போட வழிவகுக்கலாம். இது புதிய ஒப்பந்தங்களையும் தாமதப்படுத்தலாம். இந்த சூழலில் தான் முதலீட்டாளர்கள் ஐடி துறை பங்குகளை விட்டு வெளியேறி, முதலீட்டாளர்கள் வங்கி உள்ளிட்ட மற்ற துறைகளில் முதலீட்டை செய்யத் தொடங்கியுள்ளனர்.
நிதி நிலவரத்தை பார்க்கும்போது டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3 வது காலாண்டில் நிகர லாபம் 14% குறைந்து, 10,657 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே வருவாய் 5% அதிகரித்து, 67,087 கோடி ரூபாயாகவும் காணப்படுகிறது. ஏஐ சார்ந்த வருவாய் 17.3% அதிகரித்து, 1.8 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
வலுவான நிதி நிலையை கொண்டுள்ள இப்பங்கை வாங்கலாம் என்றே பல நிபுணர்களும் கூறி வரும் நிலையில், மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவன அறிக்கையானது இலக்கு விலையை 4,400 ரூபாயாகவும் பரிந்துரை செய்துள்ளது.
இதே வென்ச்சுரா நிறுவனமோ ஹோல்டு செய்யலாம் என கூறும் நிலையில், இலக்கு விலையை 3,250 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இன்னும் சில நிபுணர்கள் இப்பங்கானது பங்கு விலையானது கீழாக 2,800 ரூபாய் என்ற விலைக்கு அருகில் வரும்போது, புதிதாக வாங்கிப் போடலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். தற்போதைய சூழலில் இப்பங்கானது 2,674 ரூபாயாக காணப்படுகிறது. இது இன்னும் இப்பங்கானது செல்லிங் அழுத்தத்தில் இருப்பதையே காட்டுகிறது. ஆக கவனமுடன் சரியான ஆலோசனையுடன் திட்டமிடுவது நல்லது.
ஏஐ உண்மையில் பிரச்சனை தானா?
ஏஐ உண்மையில் வேலை வாய்ப்புகளை குறைத்து விடுமா என்ற கேள்வி, பலரிடையேயும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஐடி துறையில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறும் போது நிச்சயமாக சில வகை வேலைகள் குறைய தொடங்கியுள்ளன. குறிப்பாக மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி செய்யும் பணிகளை செய்யும் வேலைகளுக்கு ஏஐ சவாலாக வந்துள்ளது. இருப்பினும் ஒரு பக்கம் வேலை வாய்ப்புகள் குறைந்தாலும், மறுப்றக்கம் இதுவரை இல்லாத புதிய வேலைகள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில், இன்ஃபோசிஸ்-ந் நந்தன் நீலேகனி கோடிங் எழுதுவது இனி இலக்கல்ல. ஏஐ வேலை வாங்க தெரிவது தான் இனி திறமை. 90 மில்லியன் வேலைகள் ஆபத்தில் இருந்தாலும், 170 மில்லியன் வேலைகள் இனி உருவாகும் என கூறியிருந்தார். இதேபோன்று ஓபன் ஏஐ-யின் சாம் ஆஸ்ட்மேன் வேலைகளின் தன்மை மாறும். ஆனால் மனிதர்களுக்கான வேலைகள் எப்போதும் உருவாகிக் கொண்டே தான் இருக்கும் என கூறியிருந்தார்.
ஏறுமுகத்தில் தங்கம்.. திகைப்பில் சாமானியர்கள்! இப்போதே முதலீடு செய்யலாமா?
முதலீட்டாளரும், தொழில்நுட்ப வல்லுனருமான வினோத் கோஸ்லா, ஐடி மற்றும் பிபிஓ துறைகள் அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய உருமாற்றத்தை சந்திக்கும். இந்தியா இனி ஐடி சேவைகளை தவிர்த்து, ஏஐ தயாரிப்புகளை உலகிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆக அதுபோன்ற சந்தைக்கு ஏற்ப நிலவரத்தை மாற்றியமைக்கும் நிறுவனங்கள் மீண்டும் வெற்றி கொடி கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
TCS stock has plunged 14% this month: is it a buying opportunity or a warning to exit?
TCS shares fell 14% due to AI-fears and US interest rates. Experts suggest Accumulate for long-term, while cautioning short-term volatility. Story first published: Monday, February 23, 2026, 15:56 [IST] See More On: tcs, stock recommendations, டிசிஎஸ், பங்கு பரிந்துரை Other articles published on Feb 23, 2026
