Breaking: 2025 இந்தியச் சந்தைக்கு ஒரு பிளாக் இயர்! 2026-ல் ஆவது விடிவுகாலம் பிறக்குமா?

befunky-collage-2025-12-31t142811-578-1767171541

  Market update

2025 இந்தியச் சந்தைக்கு ஒரு பிளாக் இயர்! 2026-ல் ஆவது விடிவுகாலம் பிறக்குமா?

Market Update oi-Pugazharasi S By Published: Wednesday, December 31, 2025, 14:29 [IST] Share This Article

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் 2025ம் ஆண்டு ஒரு கசப்பான பக்கமாகவே முடிவுக்கு வந்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் காளைகளின் ஆட்டத்தில் சிலவை லாபத்தை கொடுத்துள்ள போதிலும், இந்திய சந்தையானது மோசமான செயல்பாட்டை கண்டுள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்நிய முதலீட்டாளர்களின் (FPI) வெளியேற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு மற்றும் நிறுவனங்களின் லாப வளர்ச்சி மந்த நிலை என மூன்று பக்க தாக்குதலில் சிக்கி நிஃப்டியும் சென்செக்ஸும் நிலைகுலைந்து போயுள்ளன. ஆனால் ஒவ்வொரு நீண்ட இரவுக்கும் பிறகும் ஒரு விடியல் உண்டு என்பது போல, 2026-ம் ஆண்டு இந்தியச் சந்தைக்கு ஒரு கம்பேக் ஆண்டாக அமையுமா? அல்லது இந்த சரிவு இன்னும் தொடருமா? வாருங்கள் பார்க்கலாம்.

2025 இந்தியச் சந்தைக்கு ஒரு பிளாக் இயர்! 2026-ல் ஆவது விடிவுகாலம் பிறக்குமா?

மீட்சி இருக்குமா?

நடப்பு ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு ஒரு சவாலான ஆண்டாக அமைந்த போதிலும், 2026ம் ஆண்டில் ஒரு வலுவான மீட்சி இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் நடப்பு ஆண்டில் சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டும், உலகச் சந்தையில் மிக மோசமான செயல்பாட்டை கண்ட குறியீடுகளாகவே உள்ளன. இதற்கு பல காரணிகள் முன் வைக்கப்படுகின்றன. குறிப்பாக பெரிய அளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் சரிவு என பலவும் சரிவுக்கு வழிவகுத்தன. இருப்பினும் 2026ம் ஆண்டில் இந்த போக்கு தலைகீழாக மாறலாம். வளர்ச்சி மீண்டு வரலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச சந்தைகள் நிலவரம்?

தென் கொரியாவின் கோஸ்பி 81% வளர்ச்சியும், பிரேசிலின் போவெஸ்பா 48%மும், அமெரிக்காவின் எஸ்&பி 500 17%மும், நாஸ்டாக் 22%மும், ஸ்டாக்ஸ் யூரோப் 32% ஏற்றமும், ஜெர்மனியின் DAX 38% ஏற்றமும் கண்டுள்ளன. இவற்றுடன் ஒப்பிடும்போது இந்திய சந்தைகள் வெறும் 4 – 5% எனும் அளவிற்கு ஏற்றம் கண்டு மிகவும் பின்தங்கியுள்ளது.

சரிவுக்கான முக்கிய காரணிகள்?

இந்திய சந்தையின் சரிவுக்கு பல முக்கிய காரணிகள் கூறப்பட்டாலும், ஏஐ தொழில் நுட்பமும், செமிகண்டக்டர் பங்குகளும் முக்கிய காரணி என்றும் கூறப்படுகிறது. அதாவது மற்ற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் எகிறிய நிலையில், இந்தியாவில் அத்தகைய பெரிய நிறுவனங்கள் இல்லாதது பின்னடைவாக அமைந்ததாக கூறப்படுகிறது, மேலும் இந்திய நிறுவனங்களின் லாப வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாக மந்த நிலையில் இருந்து வருகிறது.

இந்திய பங்குகளின் விலை அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக இருந்ததால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதுவும் இந்திய சந்தையில் முதலீடுகள் வெளியேறியதற்கும், புதிய முதலீடுகள் வரத்தையும் குறைக்க வழிவகுத்தது.

மேற்கொண்டு சந்தையை இன்னும் மோசமான சூழலுக்கு கொண்டு செல்லும் விதமாக, அமெரிக்காவின் இறக்குமதி வரி அதிகரிப்பு போன்ற சர்வதேச வர்த்தகச் சிக்கல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என பலவும் இந்தியச் சந்தையை கடுமையாக பாதித்தன. இது பல நிறுவனங்களின் வருவாயில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே தான் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 18 பில்லியன் டாலர் அளவில் வரலாறு காணாத முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

2026 திருப்புமுனையாக இருக்குமா?

2026ம் நிதியாண்டில் நாமினல் ஜிடிபி வளர்ச்சியானது 8% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2027ம் நிதியாண்டில் 10% ஆக உயரலாம் என்றும், மதிப்பீடுகள் இப்போது சீரடைந்துள்ளதாலும், டாலரின் மதிப்பு கட்டுக்குள் இருப்பதாலும் சந்தை மீள வாய்ப்புள்ளது. மேலும் அரசின் ஆதரவான கொள்கைகள் சந்தைக்கு சாதகமாக அமையலாம், குறிப்பாக வரவிருக்கும் பட்ஜெட் 2026ல் வருமான வரி குறைப்பு மற்றும் GST மாற்றங்கள் மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசின் செலவுகள் அதிகரிப்பது நுகர்வை தூண்டுகிறது. இந்தியாவின் ஜிடிபியில் 55-60% பங்களிக்கும் நுகர்வுத் துறை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷ்யா தொடர்பான மற்றும் பரஸ்பர வர்த்தக வரிகள் திரும்பப் பெறப்பட்டால், இந்தியாவின் வரி விகிதம் கணிசமாக குறையும். மேலும் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதோடு இணைந்து, ரிசர்வ் வங்கி வரும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை குறைக்க வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026ம் ஆண்டில் மீண்டும் வசந்தம் திரும்பலாம். இந்திய சந்தைகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Will the Indian stock market recover in 2026 after its worst performance in 2025?

After a worst 2025, Indian markets eye a 2026 recovery. Record FPI outflows and high valuations are easing, while policy support and potential rate cuts offer hope for growth. Story first published: Wednesday, December 31, 2025, 14:29 [IST] Other articles published on Dec 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *