பெண்கள் நிலம் வாங்கினால்.. ரூ.5 லட்சம் வரை மானியம் தரும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 18:11 [IST] Share This Article
வீடு தேடி வரும் மகாலட்சுமி என பெண்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்த மகாலட்சுமிகளின் பெயரில் நிலம் வாங்கியிருக்கிறோம். ஒரு சென்ட் இடமாவது இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்று தான் பதில் வரும். ஆனால் தமிழ்நாடு அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மூலம் அதை மெய்யாக்கி கொள்ள முடியும்.
விவசாய கூலிகளாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை, அந்த நிலத்திற்கு எஜமானர்களாக மாற்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ,முயற்சி தான் இது. சொந்த நிலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெறும் பொருளாதாரமாக மட்டுமல்ல, அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு மிகப்பெரிய அதிகாரம். இந்த சலுகை ஒருவர் எப்படி பெறலாம். யாரெல்லாம் இதன் மூலம் சலுகை பெற முடியும். உங்கள் கனவை நனவாக்க பயன்படும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.

நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்?!
தமிழ்நாடு அரசின் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் என்பது விவசாய தொழிலாளர்களாக இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் ஒரு புரட்சிகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நிலம் வாங்கினால் நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையில் அரசு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் மற்றொரு மிகப்பெரிய சலுகையும் உண்டு. அதாவது லட்சக்கணக்கில் செலவாகும் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணமும் உங்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேற்கொண்டு நிலத்தை வாங்கி வெறுமனே வைத்திருக்காமல், அதில் கிணறு வெட்டுதல், ஆழ்துளை கிணறு அமைத்தல் அல்லது மின்மோட்டார் பொருத்துதல் போன்ற பணிகளுக்கு நபார்டு வழிகாட்டுதலின் படி, தனியாக நிதியுதவி பெறலாம்.
யாருக்கெல்லாம் சலுகை கிடைக்கும்?
· பெண் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையானது ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
· விண்ணப்பதாரர் விவசாயத் தொழிலைச் செய்பவராக இருக்க வேண்டும் மற்றும் அவருக்கு சொந்தமாக வேறு எந்த விவசாய நிலமும் இருக்கக்கூடாது. முக்கியமாக விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை யாருக்கும் விற்றிருக்கவோ அல்லது பெயர் மாற்றம் செய்திருக்கவோ கூடாது.
· அதேபோல், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது.
· இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு, இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. மேலும் வாங்கப்படும் நிலம் SC/ST பிரிவைச் சேராத நில உரிமையாளர்களிடம் இருந்து வாங்கப்பட வேண்டும். வாங்கப்பட்ட நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
தேவையான ஆவணங்கள்?
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
சாதிச் சான்றிதழ்
ஆதார் அட்டை
குடும்ப அட்டை
வருமானச் சான்றிதழ்
வங்கி கணக்கு விவரம்
தொலைபேசி எண்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
எப்படி விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர், அந்தந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகி, திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறலாம். அல்லது என்ற newscheme.tahdco.com இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை?
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் முதலில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் newscheme.tahdco.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அதன் முகப்பு பக்கத்தில் உள்ள Nannilam Magalir Nila Udamai Thittam என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், புதிய பக்கத்தில் திட்டத்துக்கு தேவையான பல விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றை பிழை இல்லாமல் பூர்த்தி செய்யவும். அதன் பிறகு திட்டத்தின் நன்மைகள் என்று ஆப்ஷனில் NNMT என்ற விருப்பத்தில் Select என்பதை கிளிக் செய்யவும்.
தேவையான அனைத்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு, Proceed என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர், உங்களுடைய தொலைபேசி எண்ணை உள்ளிட்டு OTP யை பெற்றுக் கொள்ளவும்.
இப்போது திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும் அவற்றை பிழை இல்லாமல் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து, இறுதியாக Submit என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுடைய வங்கி கணக்கில் மானியம் டெபாசிட் செய்யப்படும்.
Share This Article English summary
Did you know the Nannilam scheme offers women up to Rs 5 lakh subsidy to buy agricultural land?
Dreaming of owning land? Under the Nannilam Scheme, the Tamilnadu government offers women a 50% subsidy (up to ₹5 lakh) to buy agricultural land. Story first published: Tuesday, December 30, 2025, 18:11 [IST] Other articles published on Dec 30, 2025
