தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா?
Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 8:43 [IST] Share This Article
சென்னை: தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 98, 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை எல்லாம் கொடுத்து ஒரு சவரனுக்கு நகை வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு நாம் 1.20 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.
ஒரு சாதாரண குடும்பத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் நகை வாங்குவது என்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது அவர்களின் இரண்டு – மூன்று மாத கால சம்பளம் . அந்த வகையில் தங்கம் படிப்படியாக விலை உயர்ந்து சாமானிய மக்களால் வாங்க முடியாத ஒரு பொருள் என்ற நிலையை எட்டி வருகிறது.

இந்தியாவை பொருத்தவரை இந்திய மக்களுக்கும் தங்கத்துக்குமான இணைப்பு என்பது கலாச்சார ரீதியாகவே இருந்து வருகிறது. ஒரு குழந்தை பிறந்தால் குழந்தைக்கு காது குத்துவதில் தொடங்கி அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. திருமண நிகழ்வுகள் என்றால் கேட்கவே வேண்டாம் அதிக அளவில் தங்கம் வாங்கி பயன்படுத்தக்கூடிய ஒரு விசேஷம் அது.
இதனால் தான் சாமானிய மக்கள் சிறுக சிறுக சேமித்தாவது தங்கம் வாங்கி விடுவார்கள். ஆனால் தற்போது சிறுக சிறுக சேமித்தால் கூட ஒரு சவரன் நகை வாங்க பல மாதங்கள் தேவைப்படும் என்ற நிலைக்கு தங்கம் விலை உயர்ந்து நிற்கிறது. என்னதான் மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைத்து இருக்கிறது அதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலைவாசி குறைந்திருக்கிறது , ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது இதன் காரணமாக கடன்களுக்கான வட்டி குறைந்திருக்கிறது என வைத்து கொண்டாலும் அந்த சேமிப்பு தங்கம் வாங்கும் அளவுக்கு உதவவில்லை.
சாதாரண மக்கள் வாங்கக்கூடிய விலைக்கு மீண்டும் தங்கம் விலை திரும்புமா என்பது தான் லட்சக்கணக்கானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அப்படி ஒரு நிலைமை இனி வராது என்பது தான் நாம் ஏற்று கொள்ள வேண்டிய உண்மை. இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது உள்ளூர் காரணிகள் மட்டுமல்ல சர்வதேச காரணிகளையும் பொறுத்துதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலக அளவிலேயே தங்க சந்தையே பெரிய மாற்றம் அடைந்துள்ளது.
Also Read
பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்டை தூக்கி சாப்பிட்ட தங்கம்!! 20 ஆண்டுகளில் கொடுத்த லாபம் எவ்வளவு தெரியுமா?
சர்வதேச சந்தையில் தற்போது அதிகமாக தங்கம் வாங்குவது நகை விற்பனை நிறுவனங்கள் கிடையாது, , மத்திய வங்கிகள். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படக்கூடிய மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி வைக்கின்றன. இந்த போக்கு குறைந்தால் தான் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து விலை குறையும். ஆனால் இது ஒரு சர்வதேச அரசியல் அத்தனை சீக்கிரம் மாறாது.

பல்வேறு நாடுகளுக்கு இடையே நிகழும் வர்த்தக மோதல் , அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை, மத்திய வங்கிகளின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தங்கம் விலை உயர்வுக்கு சாதகமான நிலையை உண்டாக்கி தந்திருக்கின்றன. 2004 ஆம் ஆண்டில் ஒரு சராசரி இந்திய மிடில் மாதம் குறைந்த தொகையை சேமித்து வைத்தால் ஓராண்டில் 10 கிராம் தங்கத்தை வாங்கி விட முடிந்தது . ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு நாம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் கூட நம்முடைய இரண்டு அல்லது மூன்று மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
அதாவது தங்கத்தின் விலை உயர்கிறது ஆனால் அந்த அளவிற்கு நம்முடைய ஊதியம் உயரவில்லை. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பம் மாதத்திற்கு சராசரியாக 33 ஆயிரம் வருமானம் ஈட்டுகிறது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. இதில் அத்தியாவசிய பொருட்களுக்கான செலவுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் சென்று விடுகிறது. இது தவிர கடன், கல்வி செலவு, மருத்துவ செலவு என இந்த பணமே போதாமல் இருக்கின்றனர்.
Recommended For You
வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி!! இனி தங்கம் விலை என்ன ஆகுமோ?
இனி மொத்தமாக பணத்தை கொடுத்து தங்கத்தை வாங்குவது என்பது நம்மால் முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அப்படி என்றால் சாதாரண மக்கள் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாதா என்றால் முடியும். ஆனால் நம் மனநிலையை மாற்ற வேண்டும் . அதாவது நகை சீட்டு போட்டு தங்கம் வாங்குவது ஒரு சிறந்த வழி. ஆனால் அது செபியால் ஒழுங்குபடுத்தப்பட்டது அல்ல எனவே நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே போட முடியும். இல்லை என்றால் நகைக்கு மாற்றாக கோல்டு ஈடிஎஃப் அல்லது கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த அளவிலான பணத்தையும் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முடிந்த அளவு கையில் இருக்கும் தங்கத்தை இழக்காமல் பத்திரமாக வைத்திருப்பதும் சிறந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Gold price surge: Can average Indian households still buy gold jewels?
how surging gold prices in India, now around ₹12,370 per gram for 22-karat gold as of December 14, 2025, are straining affordability for average households, particularly during festive seasons. Story first published: Sunday, December 14, 2025, 8:43 [IST] Other articles published on Dec 14, 2025
