டேக்ஸ் சேவிங் தாண்டி இவ்வளவு இருக்கா? 2026-ல் எதிர்காலத்தை மாற்றப்போகும் சிறு சேமிப்பு திட்டங்கள்!
Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 23, 2026, 16:52 [IST] Share This Article
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள், கிரிப்டோகரன்சியின் அதிரடி மாற்றங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தால் மாறும் வேலை வாய்ப்புகள்.. என 2026-ன் நிதி உலகம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல மாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களின் பார்வையில் சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றாலே, அது 80C பிரிவின் கீழ் வரி சேமிக்க உதவும் ஒரு கருவி, குறைந்த ரிஸ்க் உடைய திட்டங்கள் என்ற பிம்பம் மட்டுமே உள்ளது. ஆனால் தற்போது புதிய வரி முறையானது பிரபலமாகி வரும் சூழலில், வரி விலக்கின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் பிபிஎஃப் (PPF) மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) ,தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) போன்ற திட்டங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன.
அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வரி விலக்கு கிடைக்கிறதோ இல்லையோ, இந்த திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி கிடையாது. உதாரணத்திற்கு ஒரு மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் வருமானம் ஈட்டினால் அதற்கு வரி கட்ட வேண்டும். ஆனால் மேற்கண்ட சிறுசேமிப்பு திட்டத்தின் முதிர்வு தொகை முழுவதும் வரி இல்லாமல் வந்து சேரும்.
புதிய வரி முறையும் 80சியும்: 2020-21-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது (2026-ல்) டீபால்ட்டான வரி முறையாக மாறியுள்ள புதிய வரி விதிப்பு முறையின் நோக்கம் மிகவும் எளிமையானது. குறைந்த வரி விகிதம், அதிக விலக்குகள் கிடையாது. முன்பு நடுத்தர வர்க்கத்தினர் வரி சேமிக்கப் பயன்படுத்திய பிரிவு 80சி பிரிவு, இப்போது புதிய வரி முறையில் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் 80சி சலுகைக்காக மட்டுமே பிபிஎஃப் போன்ற திட்டங்களை விரும்பி வந்தவர்களுக்கு, அத்திட்டங்கள் இப்போது பயனற்றதாக தோன்றலாம். பிபிஎஃப்-ல் நீங்கள் முதலீடு செய்யும் போது வரி விலக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால், அதன் உண்மையான பலன் வேறு இடத்தில் உள்ளது. வட்டி வருமானத்திற்கு வரி கிடையாது. மற்ற முதலீடுகளான எஃப்டி, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது அரசு பத்திரங்களில் நீங்கள் ஈட்டும் வட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் வரி கட்ட வேண்டும். ஆனால், பிபிஎஃப்-ல் ஈட்டும் வட்டிக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது. முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக 15 அல்லது 25 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் பெறப்போகும் மொத்தத் தொகைக்கும் வரி கிடையாது. நீண்ட காலம் வைத்திருப்பதால், இதில் கூட்டு வட்டியின் பலனும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
சுகன்யா சம்ரிதி திட்டத்தை பொறுத்த வரையில், பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இத்திட்டத்தில் குழந்தையின் 18 வயது அல்லது 21 வயது வரையில் பணம் எடுக்க முடியாது. அதை பலரும் குறையாக பார்க்கிறார்கள். ஆனால் இது ஒரு நிதி ஒழுக்கத்தை கட்டமைக்கும். பெண் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்காக சேமிக்கப்படும் பணம் வேறு எதற்கும் செலவாகி விடக்கூடாது என்பதற்காகவே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் 8.2% வட்டி, இந்தியாவிலேயே சிறு சேமிப்புத் திட்டங்களில் மிக அதிகம். பழைய வரி முறையில் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை இருந்தாலும், புதிய வரி முறையில் இல்லை. எனினும் நீண்ட கால வளர்ச்சிக்கு திட்டமிடுபவர்களுக்கு இது ஏற்ற திட்டம்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டமானது தற்போது சற்று வரவேற்பை இழந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதில் மற்ற திட்டங்களை போலன்றி, வட்டிக்கு வரி உண்டு. ஆக 80சி இல்லாமல் பெரிய பலனில்லை என கூறப்படுகிறது. ஆக நீங்கள் புதிய வரி முறையை பின்பற்றினால், 80சி சலுகை கிடைக்காது. அப்படி இருக்கும்போது 7.7% வட்டிக்கு வரி கட்டினால், அதன் நிகர லாபம் மிகவும் குறைந்துவிடும். ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் வரிச் சலுகைகளுக்காக அலைந்த காலம் முடிந்து, இப்போது நோக்கத்திற்காக சேமிக்கும் புதிய கலாச்சாரம் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, ஒரு கலாச்சார மாற்றமும் கூட. கணிக்க முடியாத இன்றைய நிதி உலகில், அமைதியாக, வரி அழுத்தமின்றி, சீராக வளரும் ஒரு முதலீடு என்பது மிக அரிதானது. அதுவே பிபிஎஃப்-ன் தற்போதைய தனிச்சிறப்பு. எஸ் எஸ் ஒய் திட்டமானது மகளின் எதிர்கால தேவைக்காகவும், சமூகத்தின் நலனுக்காகவும் நீங்கள் செய்யும் ஒரு உறுதியான முதலீடு.
பணத்தை மிக வேகமாக செலவு செய்ய தூண்டும் இன்றைய உலகில், அதை இறுக்கி பிடித்து, நீண்ட கால இலக்குகளுக்காக யோசிப்பது அவசியம். ஆக புதிய வரி முறையில் சலுகைகள் இல்லாவிட்டாலும், இந்த பழக்கவழக்கங்களை உருவாக்குவதில் பிபிஎஃப் மற்றும் எஸ் எஸ் ஒய் போன்றவை சிறந்த கருவிகளாக செயல்படுகின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Beyond Section 80C, why do small savings schemes like PPF and SSY remain essential for modern Indian portfolios?
Small savings offer tax-free compounding and goal-based discipline, serving as stable wealth-building tools even without traditional 80C tax deductions. Story first published: Monday, February 23, 2026, 16:52 [IST] See More On: ppf, ssy, tax, பிபிஎஃப், வரி Other articles published on Feb 23, 2026
