பூமிக்கு அடியில் 4 கி மீ! ஆச்சரியப்படுத்தும் உலகின் ஆழமான சுரங்கம்- வருஷத்துக்கு 8,000 கிலோ தங்கம்!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, February 12, 2026, 11:23 [IST] Share This Article
ஒரு லிஃப்டில் ஏறி தொடர்ந்து ஒரு மணி நேரம் கீழே பூமிக்கு அடியில் சென்றால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே தலைசுற்றுகிறதல்லவா. ஆனால் தென்னாப்பிரிக்காவின் எம்போனெங் (Mponeng) சுரங்க தொழிலாளர்களுக்கு இது தினசரி வாழ்க்கை. உலகின் மிக ஆழமான இந்த தங்க சுரங்கம், பூமிக்கு அடியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அதாவது, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை விட சுமார் ஐந்து மடங்கு ஆழம் என்றால் யோசித்து பாருங்களேன்.
மேற்பரப்பில் இருந்து தொழிலாளர்கள் தங்களின் வேலை பகுதியை அடைய மட்டுமே மூன்று மணி நேரம் ஆகிறது. அங்கு நிலவும் வெப்பத்தையும் கடந்து, ஆண்டுக்கு சராசரியாக 8,000 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். மரணத்தின் விளிம்பில் நின்று, பூமியின் இதய பகுதியில் இருந்து எடுக்கப்படும் அந்த பொன்னிற உலோகத்தின் பின்னணியில் இத்தனை போராட்டங்கள் இருக்கின்றனவா? வியக்க வைக்கும் அந்த பாதாள உலகத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கற்பனையிலும் எட்டாத விஷயங்கள்!
தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் பொருளாதார பலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய சக்தி. மக்களின் உணர்வுகளுடன் பின்னி பிணைந்து உள்ள உணர்ச்சிகரமான ஒரு விலையுயர்ந்த உலோகம். அப்படிப்பட்ட தங்கத்தின் பின்னணியைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது நிச்சயம் மெய்சிலிர்க்கத் தான் செய்கிறது. கற்பனையிலும் கூட யோசிக்க முடியாத சில விஷயங்கள் இன்றும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. உண்மையில் இதெல்லாம் நடக்குமா என்று நினைக்கும் விஷயங்கள் கூட, தங்க சுரங்களில் நடந்து கொண்டுள்ளன.
இன்று உலகின் பெரும் பகுதி தங்கம் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது.மனிதன் தன் பேராசைக்காகவும் தேவைக்காகவும் பூமியை எந்த அளவிற்கு தோண்டிக் கொண்டு செல்கிறான் என்பதற்கு சான்றாக விளங்கும் உலகின் ஆழமான 5 சுரங்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
முக்கிய 5 சுரங்கங்கள்?
பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சுரங்கம் டவுடோனா(Tautona) தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்த சுரங்கம் 3.9 கிலோ மீட்டர் தூரம் உடையது. 2018ல் மூடப்படும் வரையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது. இரண்டாவது இடத்தில் இருப்பது சவுகா (Savuka). இதுவும் தென்னாப்பிரிக்காவில் 3.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல பில்லியன் டன் தங்க தாதுக்களை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க இடம் தான் இது.
மூன்றாவது இடத்தில் உள்ள டிரீஃபோன்டைன் (Driefontein) சுரங்கமும் தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இது பூமிக்கு அடியில் 3.42 கிலோ மீட்டர் தொலைவு உடையது. இன்றும் இயங்கி கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி சுரங்கமாகும். 4வது இடத்தில் இருக்கும் க்லூஃப் (Kloof) சுரங்கமும் தென்னாப்பிரிக்காவிலேயே உள்ளது. 3.35 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சுரங்கத்தில், தங்கத்துடன் சேர்த்து யுரேனியமும் வெட்டியெடுக்கப்படுகிறது. பட்டியலில் இறுதியாக உள்ள லாரோண்டே (Laronde) சுரங்கமானது கனடாவில் 3.26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுரங்கமாகும். கனடாவின் ஆழமான சுரங்கமான இதில், தங்கம், காப்பர், வெள்ளி மற்றும் துத்தநாகம் கிடைக்கிறது.
முதலிடத்தில் உள்ள ஆபத்தான சுரங்கம்!
தற்போது உலகின் முதலிடத்தில் உள்ளது எம்போனெங் (Mponeng) தங்க சுரங்கம் தான். இது உலகின் மிக ஆழமான சுரங்கமாகும். தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்த சுரங்கம், பூமிக்கு அடியில் சுமார் 4 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது. இந்த சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், மேற்பரப்பில் இருந்து தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்றடைய சுமார் 3 மணி நேரம் ஆகிறதாம். ஒரு சிறிய லிப்ட் போன்ற அமைப்பில் உயிரை பணையம் வைத்து அவர்கள் பாதாளத்திற்கு செல்கிறார்கள்.
பூமியின் ஆழத்திற்கு செல்லச் செல்ல வெப்பம் அதிகரிக்கும் என்பது அறிவியல். இந்த சுரங்கத்தின் ஆழத்தில் பாறைகளின் வெப்பநிலை 150°C வரை இருக்கும். இந்த அதீத வெப்பத்தில் மனிதர்கள் வேலை செய்வது சாத்தியமில்லை என்பதால், ராட்சத குளிர்விப்பு அமைப்புகள் மூலம் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு பல்வேறு சவால்களுக்கும் மத்தியிலும் கூட, இந்த சுரங்கத்தில் ஆண்டுக்கு சராசரியாக 8,000 கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆபத்துகளின் இருப்பிடமாக இருக்கும் இந்த சுரங்கத்தில் வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஆனால் அவ்வளவு சவால்களுக்கும், கஷ்டங்களுக்கும் நடுவில் தான் இன்று அணியும் தங்க நகைகள் நம் கைக்கு வருகின்றன.
Share This Article English summary
Which gold mine reaches a depth of 4 km, requires a 3-hour descent for workers, and yields 8,000 kg of gold annually?
South Africa’s Mponeng Gold Mine is the world’s deepest, reaching 4km underground. Despite extreme 150°C rock temperatures and 3-hour commutes, it yields 8,000kg of gold annually. Story first published: Thursday, February 12, 2026, 11:23 [IST] See More On: gold, தங்கம் Other articles published on Feb 12, 2026
