டிரம்ப்பால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சீனா பிரேசிலுக்கும் பிரச்சனை தான்! செக் வைத்தது எப்படி?
World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, February 11, 2026, 11:36 [IST] Share This Article
உலக வர்த்தக அரங்கில் இப்போது ஒரே ஒரு பெயர் தான் ஹாட் டாபிக் – அது டொனால்ட் டிரம்ப்! அமெரிக்காவிடமிருந்து பலன் பெற வேண்டுமென்றால், அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்ற அவரது ஒற்றை வரி கொள்கை, இப்போது இந்தியா, சீனா மற்றும் பிரேசில் என சில பிரிக்ஸ் நாடுகளுக்கே மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
முதல் நாள் இந்தியாவுக்கு 18%- ஆக வரியை குறைத்தவர், பரவாயில்லையே என நினைக்கும் முன்பே, அடுத்த நாள் வங்கதேசத்துடன் கைகோர்த்து இந்தியா, சீனா மற்றும் பிரேசிலின் ஒட்டுமொத்த பருத்தி சந்தையையும் காலி செய்ய குறி வைத்துள்ளார்.

ஒருபுறம் சீனாவை ஃபோர்ஸ்டு லேபர் (Forced labour) புகாரில் ஓரங்கட்டியது என்றால், மறுபுறம் பிரேசிலின் பருத்தி ஏற்றுமதிக்கு அமெரிக்க பருத்தியை மாற்றாக நிறுத்தி பிரேசிலுக்கும் ஆப்பு வைத்துள்ளார். சொல்லப்போனால் டிரம்பின் இந்த வர்த்தக அறிவிப்பானது, வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் ஏற்றுமதி கனவை கலைக்க அமெரிக்கா விரித்துள்ள ஒரு மிகப்பெரிய வலை. டிரம்பின் இந்த மாஸ்டர் பிளான் உலக பொருளாதார வரைபடத்தை எப்படி மாற்றப்போகிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
ஒரே அறிவிப்பால் திணறும் 3 நாடுகள்?
அமெரிக்க அதிபரின் அதிரடி வர்த்தக கொள்கைகளால் இந்தியா மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனா மற்றும் பிரேசிலும் கூட திணறி வருகின்றன.
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் என்னும் ஒற்றை அறிவிப்பால், மூன்று முக்கிய பொருளாதாரத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் டிரம்ப். இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஜவுளி துறையும் எதிர்கொள்ளப் போகும் சவால்களை ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாது.
என்ன தான் நினைக்கிறார்?
சமீபத்தில் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு 18% வரி நிர்ணயிக்கப்பட்டது, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து தவிடு பொடியாக்கி உள்ளார் டிரம்ப். ஏனெனில் அமெரிக்கா தற்போது இந்த 18% வரியை மற்ற நாடுகளுடன் பேரம் பேச ஒரு அடிப்படையாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவும் வங்கதேசமும் ஒரு பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் வங்கதேசத்திற்கான அடிப்படை வரி 19% (இந்தியாவை விட 1% அதிகம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதிலுள்ள ஒரு சிறப்பு அம்சமே ஜவுளி துறைக்கு 0% வரி என்பது தான். அதாவது வங்கதேசம் தனது ஆடை தயாரிப்பிற்கு அமெரிக்காவில் விளைந்த பருத்தி மற்றும் செயற்கை இழைகளை பயன்படுத்தினால், அந்த ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 0% வரி மட்டுமே விதிக்கப்படும். இது உண்மையில் இந்தியா, சீனா, பிரேசிலுக்கு எதிராக டிரம்ப் விடுக்கும் சவாலா அல்லது வர்த்தக ஒப்பந்தமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு?
வரலாற்று ரீதியாக வங்கதேசம் தனது நூல் தேவைகளுக்கு இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்து வருகிறது. இப்போது அவர்கள் வரிச் சலுகைக்காக, அமெரிக்க பருத்திக்கு மாறினால், இந்தியா தனது மிகப்பெரிய வாடிக்கையாளரை இழக்க நேரிடும். இது ஒரு புறம் அமெரிக்க சந்தையிலும் கடும் போட்டியை ஏற்படுத்தும். மறுபுறம் நூல் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு முக்கிய வாடிக்கையாளராக இருந்து வரும் வங்க தேசத்தையும் தட்டி பறிக்கும் முயற்சி எனலாம். மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்பது போல இந்தியாவுக்கு வரியை குறைப்பது போல் குறைத்து, மறுபுறம் பெரிய ட்விஸ்டையும் வைத்துள்ளார் டிரம்ப். இதனால் வங்கதேசத்திற்கு அனுப்பப்படும் ஏற்றுமதி வாய்ப்பும் பறிபோகும் வாய்ப்பு உண்டு. அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியும் பாதிக்கும்.
திருப்பூர், சூரத் நகரங்களுக்கு பெரும் பிரச்சனை?
சர்வதேச அளவில் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர்கள். இதில் இந்தியாவும் சீனாவும் மிகப்பெரிய நூற்பு வசதிகளை கொண்டுள்ளன. ஏற்கனவே சீனாவை உலக வர்த்தக சந்தையில் ஒதுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் டிரம்ப், தற்போது சீனாவை அடுத்து உலக சந்தையில் இந்திய பருத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதையும் குறைக்க களமிறங்கியுள்ளார். சொல்லப்போனால் வரிச் சலுகை என்ற பெயரில் இந்தியாவின் இடத்தை அமெரிக்கா தட்டிப் பறிக்க பார்க்கிறது.
ஏற்கனவே குறைந்த கூலி மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியால் வங்கதேசம் இந்தியாவிற்கு போட்டியாக உள்ளது. இப்போது இந்தியாவுக்கு 18% வரி, வங்கதேசத்திற்கு 0% வரி என்றால், விலையில் மிகப்பெரிய இடைவெளி ஏற்படும். மேலும் சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்ய வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்கள் தரமானவை/நேர்மையானவை என்று நாம் கூறி வந்த வாதமும் வலுவிழக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் திருப்பூர், சூரத் போன்ற இந்தியாவின் ஜவுளி மையங்கள் இப்போது ஒரு தனிப்பட்ட நாட்டோடு மட்டும் போட்டியிடவில்லை, பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
Share This Article English summary
Is Trump’s US – Bangladesh trade policy a global checkmate for India, China, and Brazil? Who will win the cotton war?
Trump’s deal forces nations to buy US cotton for 0% tariffs, bypassing India, China, and Brazil. This strategic move reshapes global supply chains and challenges competitors. Story first published: Wednesday, February 11, 2026, 11:36 [IST] See More On: india, trade deal, donald trump, டொனால்ட் டிரம்ப், வரி Other articles published on Feb 11, 2026
