கேஷ் டெபாசிட்செய்பவர்களுக்கு ஜாக்பாட்! PAN கார்டு இல்லாமல் இனி அதிக பணம் டெபாசிட் செய்யலாம்!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 10, 2026, 11:26 [IST] Share This Article
வங்கிக்கு சென்று பணம் டெபாசிட் செய்யும் போது, ஐம்பதாயிரம் ரூபாயை தாண்டினாலே பான் கார்டு என்ற கேள்வி நம்மை துரத்தும். அந்த ஒரு சிறிய அட்டை கையில் இல்லை என்றால், அன்றைய வேலையே நின்று விடும். ஆனால் இனி அந்த கவலைக்கு தேவை இருக்காது என்கிறது மத்திய அரசின் புதிய வருமான வரி வரைவு விதிகள் 2026.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ரொக்கப் புழக்கத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாமானிய மக்களின் வங்கி பணிகளை எளிதாக்க வருமான வரித் துறை அதிரடியான சில அறிவிப்புகளை கொடுத்துள்ளது. 60 ஆண்டுகால பழைய சட்டங்களை உடைத்து எறியும் இந்த புதிய மாற்றத்தால், பான் கார்டு இல்லாமலேயே நீங்கள் டெபாசிட் செய்ய கூடிய தொகையின் வரம்பு அதிகரிக்கப்பட உள்ளது.
இது சிறு வணிகர்களுக்கும், அவசரத் தேவைக்காக பணம் செலுத்தும் சாமானியர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தரப்போகிறது. அப்படி என்ன புதிய சலுகைகள் வரப்போகிறது? எந்தெந்தப் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு தேவையில்லை? வருமான வரித் துறையின் இந்த ஸ்மார்ட் மூவ் பற்றி விரிவாக பார்ப்போம்.

முக்கிய மாற்றங்கள்!
புதிய வரைவு வருமான வரி விதிமுறைகளின் படி, ரொக்க பணத்தை டெபாசிட் செய்தல், திரும்ப எடுத்தல், மோட்டார் வாகனங்கள், சொத்து வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கு பான் எண்ணை குறிப்பிடுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025-ஐ நடைமுறைக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தை எளிமைப்படுத்த, புதிய வரைவு விதிகள் 2026 வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்துகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்கள் வரும் 22ம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
எதற்கு பான் அவசியம்?
வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது திரும்ப எடுக்கவோ ஒருவா் விரும்பினால், அதற்கு அவர் தனது பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில், ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு அதிகமான ரொக்கத்தை டெபாசிட் செய்ய பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக உள்ளது.
மோட்டார் வாகனத்திற்கும், அசையா சொத்துக்களும் வரம்பு?
புதிய விதிமுறைகளின் படி, 5 லட்ச ரூபாய்க்கு மேல் விலை கொண்ட மோட்டார் வாகனங்களை வாங்குபவா், அது இருசக்கர வாகனமாக இருந்தாலும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். தற்போது உள்ள விதிமுறைகளின்படி இருசக்கர வாகனங்கள் வாங்கும் போது பான் எண்ணை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிற மோட்டார் வாகனங்கள் வாங்கும் போது பான் எண்ணை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆக இரு சக்கர வாகனமோ, 4 சக்கர வாகனமோ 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செல்லும் போது கட்டாயம் அனைவரும் பான் கட்டாயம் கொடுத்து ஆக வேண்டும்.
மேலும் திருமணம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் அல்லது விருந்து மண்டபங்களில் ஹோட்டல் மற்றும் உணவக கட்டணங்கள் 1 லட்சம் ரூபாயை தாண்டினால் பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம். தற்போதுள்ள விதிமுறைகளின் படி இந்த கட்டணங்கள் 50,000-ஐ தாண்டினால் பான் எண்ணை சமா்ப்பிக்க வேண்டும். ஆக இது 1 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சற்று தளர்வளிக்கலாம்.
எந்தவொரு அசையா சொத்தை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும், பிறருக்கு பரிசளிக்கும் போது அல்லது அந்த சொத்து தொடர்பாக கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது அதற்கான மொத்த செலவு 20 லட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்தால், பான் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்தச் செலவு 10 லட்சம் ரூபாயாக இருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று உள்ள நிலையில், அந்த வரம்பும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான சலுகைகள் அதிகரிப்பு?
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சில சலுகைகளுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச உணவு மற்றும் மது அல்லாத பானங்களுக்கான வரி விலக்கு மதிப்பு ஒரு வேளைக்கு 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அலுவலக வாகனங்களுக்கு, 1.6 லிட்டருக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட கார்களுக்கு மாதம் 8,000 ரூபாய் வரை சலுகை வழங்கப்படலாம். இதுவே பெரிய கார்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வரை சலுகை வழங்கப்படலாம். இதில் டிரைவர்களுக்கான படித் தொகையும் அடங்கும்.
மெட்ரோ நகரங்களின் பட்டியலில் புதிய நகரங்கள்!
வீட்டு வாடகை படி (HRA) கணக்கிடும் போது, 50% சலுகை பெறும் மெட்ரோ நகரங்கள் பட்டியலில் இதுவரை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை மட்டுமே இருந்தன. இப்போது அந்தப் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி மேற்கண்ட 4 நகரங்களில் வசிப்பவர்களும் இனி அதிகப்படியான HRA வரி விலக்கு பெற முடியும்.
கிரிப்டோ சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் கரன்சி!
டிஜிட்டல் சொத்துக்கள் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ள அரசு, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் (Crypto Exchanges) குறித்தும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கிரிப்டோ சேவைகளை வழங்குபவர்கள் இனி பரிவர்த்தனை தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கான தகவல் பரிமாற்றம் 2027-28 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி (Digital Rupee) மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள், இனி அதிகாரப்பூர்வமான ரொக்கமில்லாத பரிவர்த்தனையாக (Non-cash transaction) அங்கீகரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Share This Article English summary
What are the new PAN card limits for bank deposits, property deals, and hotel bills in the 2026 draft rules?
Draft rules propose mandatory PAN for annual cash transactions above Rs.10 lakh, property deals exceeding Rs.20 lakh, and hotel bills over Rs.1 lakh, simplifying daily compliance. Story first published: Tuesday, February 10, 2026, 11:26 [IST] See More On: income tax, pan card, வருமான வரி, பான் கார்டு Other articles published on Feb 10, 2026
