AI வேட்டையில் அடுத்த டார்கெட்: 2026-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய டாப்-3 இந்திய பங்குகள்!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 9, 2026, 16:03 [IST] Share This Article
இன்று உலகமே செயற்கை நுண்ணறிவு (AI) எனும் ஒற்றை சொல்லால் இயங்க தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் வெறும் கற்பனையாக இருந்த விஷயங்கள், இன்று தொழில் துறையின் முதுகெலும்பாக மாறிவிட்டன. இந்திய ஐடி துறையை பொறுத்த வரை, இது ஒரு இக்கட்டான அதே சமயம் மகத்தான வாய்ப்புகள் நிறைந்த காலம். பாரம்பரிய சாப்ட்வேர் சேவைகளை தாண்டி, யார் அதிகமாக ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்துகிறார்களோ, அவர்களே வருங்காலத்தின் வெற்றியாளர்களாக இருப்பார்கள் எனலாம். இது இந்திய பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், நீண்ட கால அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்னென்ன? அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் (Persistent Systems)
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது வணிக மாதிரியை தொடர்ந்து மேம்படுத்தி வரும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், தற்போது கிளவுட், டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மாற்றியமைக்க, ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் சமீபத்திய காலாண்டுகளாக இன்ஜினியரிங் மற்றும் வணிக ரீதியான வேலைகளை மிக வேகமாக முடிக்க ஏஐ கட்டமைப்புகளை பயன்படுத்துகிறது. தனது சொந்த நிறுவன செயல்பாடுகளிலேயே ஏஐ ஏஜென்ட்களை பயன்படுத்தி, உற்பத்தி திறனை அதிகரிப்பதில் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. இதன் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் Frontier Firm என அங்கீகரிக்கப்பட்டுள்ள இவர்களின் தொழில்நுட்ப வலிமைக்கு இதுவே சான்றாகும்.
இந்த நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகச் சிறந்த நிதி வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 27.3% ஆகும். இதே லாப வளர்ச்சி 32.7% அளவுக்கு வேகமாக வளர்ந்துள்ளது. இதே ஈக்விட்டி மீதான லாபம் சராசரியாக (ROE) 21.8% ஆகவும், மூலதனத்தின் மீதான வருவாய் (ROCE) 29% ஆகவும் உள்ளது. இந்த நிறுவனம் முக்கியமாக, எவ்வித கடனும் இல்லாத, ஒரு வலுவான இருப்புநிலை குறிப்பை கொண்டுள்ளது. ஐடி நிறுவனம் எதிர் காலத்தில் வளர்ந்து வரும் ஏஐ (AI) சார்ந்த தொழில்நுட்பங்களை இன்னும் ஆழமாகத் தனது செயல்பாடுகளில் புகுத்த திட்டமிட்டுள்ளது.
சையன்ட் (Cyient)
சர்வதேச இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது அதன் வாடிக்கையாளர்களுடன் இணைந்து டிஜிட்டல் வடிவமைப்பு. அறிவு சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தளங்களை உருவாக்குதல், நிலைத்தன்மை சார்ந்த சவால்களுக்கு தீர்வு காணுகிறது. அடுத்த தலைமுறை நோக்கிய தொழில் நுட்பங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் சையன்ட் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது. இது செமிகண்டக்டர் சார்ந்த தீர்வுகள் மற்றும் ஏஐ சார்ந்த தீர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறது.
டிசம்பர் 2025 காலாண்டில் சையன்ட் செமிகண்டக்டர் நிறுவனம், இந்தியாவின் முதல் சிலிக்கான் பிளாட்பார்மை அறிமுகப்படுத்தி, ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிறுவனம் Azimuth AI நிறுவனத்துடன் இணைந்து முதன்மையான ஸ்மார்ட் மீட்டர் சிப்பையும் உருவாக்கியுள்ளது. இது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவால் அறிமுகம் செய்யப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் AI மற்றும் வருங்கால திறன்களுக்கான சிறப்பு மையங்களை சையண்ட் தொடங்கியுள்ளது. இது இளைஞர்களை மேம்படுத்தவும், விக்சித் பாரத் 2047 (Viksit Bharat 2047) என்ற தேசிய தொலைநோக்கு பார்வையை ஆதரிக்கவும் வழிவகுக்கிறது. இந்நிறுவனத்தின் நிதி நிலவரத்தை பார்க்கும்போது, வருவாய் வளர்ச்சியானது கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 10.7% அளவுக்கும், லாபம் 13.7% அளவுக்கும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே ROE மற்றும் ROCE விகிதமானது முறையே 14.7% மற்றும் 20.4% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து கடனில்லா நிறுவனமான இது, ஏஐ தொடர்பான அம்சங்களில் முதலீட்டை அதிகரித்து வருகிறது. இது அதன் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிக்க உதவிகரமாக இருக்கும்.
டாடா எல்க்ஸி
டாடா எல்க்ஸி சர்வதேச அளவிலான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும். இது சாப்ட்வேர் மற்றும் இன்ஜினியரிங் வடிவமைப்பில் ஒரு ஜாம்பவானாகவும் திகழ்கிறது. இது சாப்ட்வேர் டெவலப்மெண்ட் & சர்வீசஸ் (SDS) மற்றும் சிஸ்டம்ஸ் இண்டகிரேஷன் & சப்போர்ட் (SIS) என இரு முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு இரு முக்கிய பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் TEDAX போன்ற தரவு நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு போன்ற பல அம்சங்களுடன் ஒரு வலுவான சூழலை உருவாக்கியுள்ளது. TEDAX தளம் விண்வெளித் துறையில் முன்கூட்டியே பராமரிப்புத் தேவைகளை கண்டறிய உதவுகிறது. அதாவது அதிகப்படியான தரவுகளை பகுப்பாய்வு செய்து, கோளாறுகள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றை அடையாளம் காண்பதன் மூலம் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டு திறனை அதிகரிக்கிறது. இதேபோன்று மருத்துவத் துறையில் நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சவாலான சேவைகளுக்காகவும், டாடா எல்க்ஸி-ந் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.
நிதி நிலவரத்தை பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 18.3% ஆகவும், லாபம் 25.1% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே ROC மற்றும் ROCE விகிதங்கள் முறையே, 31.4% மற்றும் 42.2% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனம் கடனில்லா நிறுவனமாக இருந்து வருகிறது. இது அதன் நீண்ட கால வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது.
மேற்கண்ட 3 நிறுவனங்களுமே ஒவ்வொரு வகையில் ஏஐ செயல்பாட்டில் தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளன. இது அவற்றின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். இது அவற்றின் பங்கு விலையிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Which are the top 3 AI-linked stocks in India that I should keep on my watchlist for 2026?
Tata Elxsi, Persistent Systems and Cyient are top AI stocks to watch, driven by innovations in autonomous vehicles, healthcare diagnostics, and indigenous semiconductor chip platforms. Story first published: Monday, February 9, 2026, 16:03 [IST] See More On: stock recommendations, பங்கு பரிந்துரை Other articles published on Feb 9, 2026
