பட்ஜெட் 2026:பெரிய சலுகை இருக்காது,ஆனா நிம்மதி இருக்கும்!நிதியமைச்சர் கொடுக்கப்போகும் அப்டேட் என்ன?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 29, 2026, 19:22 [IST] Share This Article
பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ள இந்த பட்ஜெட், இந்தியாவின் 40 கோடி நடுத்தர வர்க்கத்தினருக்கு வெறும் அறிக்கை மட்டுமல்ல, அவர்களின் அடுத்த ஒரு வருட கால சேமிப்பு மற்றும் வாங்கும் திறனை தீர்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையில் நுணுக்கமான மாற்றங்கள் மூலம் சாமானியர்களுக்கு பெரிய நிம்மதியை தரும் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜ்ஜிய வரி!
கடந்த ஆண்டு பட்ஜெட் மற்றும் அதை தொடர்ந்து வந்த ஜிஎஸ்டி மாற்றங்கள் நடுத்தர மக்களுக்கு பெரிய அளவிலான பலனை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், புதிய வரி முறையில் கொண்டு வந்த மாற்றம் 80% வரி செலுத்துவோருக்கு நேரடி பலனை தந்தது. குறிப்பாக 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி சுமை பூஜ்ஜியமாக்கப்பட்டது. அதோடு சம்பளதாரர்களுக்கு மேலும் போனஸ் கொடுக்கும் விதமாக 75,000 ரூபாய் நிலையான வரிக் கழிவு கொடுக்கப்பட்டது. அதனுடன் சேர்த்தால், 12.75 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள ஒரு சம்பளதாரர், ஒரு பைசா கூட வரி செலுத்த தேவையில்லை என்ற நிலை உருவானது.
ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) – விலைக் குறைப்பு அதிரடி!
பட்ஜெட்டிற்கு சில மாதங்கள் கழித்து (செப்டம்பர் 2025), சுமார் 400 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இது சாதாரண மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை வெகுவாக குறைத்தது. மத்திய அரசின் அதிரடியான இந்த அறிவிப்புகள் ஏற்கனவே சாமானிய மக்களுக்கு பலன் அளித்து வருகின்றன. இருப்பினும் வரி விகிதம் குறைவாக இருந்தாலும், சில சவால்களை சாமானிய மக்களின் ‘வாங்கும் திறனை மறைமுகமாக பாதிக்கின்றன,
குறிப்பாக வரி தொடர்பான சட்டச் சிக்கல்கள் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்து வருகின்றன. இது ஒரு புறம் பிரச்சனை எனில் மறுபுறம் தாமதமான ரீஃபண்டுகள் மற்றொரு கவனிக்க வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மக்கள் அதிகமாக செலுத்திய வரி பணம் திரும்ப வருவதில் ஏற்படும் காலதாமதம் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் வரி தாக்கல் செய்யும் முறை இன்னும் சிக்கலாக இருப்பது சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக இதுபோன்ற சிறு சிறு நுணுக்கமான விஷயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது சமீபத்திய காலமாக இருந்து வருகிறது. ஆக வருமான வரி தாக்கல் செய்வோருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
பெரிய நிறுவனங்களை விட, சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் , தனிநபர்கள் தான் இந்த நிர்வாக சிக்கல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது கையில் இருக்கும் பணம் மேற்கண்ட சில சிக்கல்களால் முடங்கிப் போகிறது. ஆக அதற்கான சாதகமான முடிவுகள் சிறு தொழில் செய்வோருக்கும் உதவிகரமாக இருக்கும்.
பட்ஜெட் 2026-ல் எதிர்பார்க்கப்படும் தீர்வுகள்?
பல விதமான வரி விகிதங்களை குறைத்து, எளிமையான முறையை கொண்டு வருவது வருமான வரி தாக்கல் செய்வோருக்கு பெரிய அளவிலான பலனை கொடுக்கும். மேலும் வரி தொடர்பான புகார்களை ஆன்லைன் மூலமே விரைவாக தீர்க்கும் வசதிக்காக டிஜிட்டல் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது,
மனிதத் தலையீடு இல்லாமல் நேரடியாக வங்கி கணக்கிற்கு ரீஃபண்ட் வரும் முறையை மேலும் வேகப்படுத்துதல் இன்னும் உதவிகரமாக இருக்கும். மொத்தத்தில் வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிரடியான பெரிய பெரிய அறிவிப்புகள் வராவிட்டாலும், நடுத்தர மக்களுக்கு நிம்மதி கொடுக்கும் அறிவிப்புகள் வரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Share This Article English summary
Budget 2026: Will the fine print offer more relief than big tax announcements?
Budget 2026 focuses on subtle fine print relief like standard deduction hikes and administrative reforms, rather than big tax cuts, following last year’s major concessions. Story first published: Thursday, January 29, 2026, 19:22 [IST] Other articles published on Jan 29, 2026
