EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்!

befunky-collage6-1769335012

  செய்திகள்

EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்!

News oi-Pugazharasi S By Published: Sunday, January 25, 2026, 15:27 [IST] Share This Article

தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் ஓசூர், இந்தியாவின் மின்சார வாகன (EV) புரட்சியின் தலைநகராக இத்தனை காலம் மகுடம் சூடி நின்றது. ஓலா, ஏத்தர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஓசூரை தங்கள் கூடாரமாக மாற்றிய நிலையில், இப்போது காற்று வீசும் திசை மாறத் தொடங்கியுள்ளது.

திடீரென பல பெரிய நிறுவனங்களின் பார்வை மகாராஷ்டிராவின் சாம்பாஜி நகர் (அவுரங்காபாத்) பக்கம் திரும்பி இருப்பது ஏன்? ஓசூரின் உள்கட்டமைப்பையும், தமிழகத்தின் சலுகைகளையும் விஞ்சி, அப்படி என்ன மந்திரத்தை வைத்திருக்கிறது அந்த சாம்பாஜி நகர்.

EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்!

வெறும் நிலம் மட்டுமல்ல, லாஜிஸ்டிக்ஸ் செலவு, சந்தை நெருக்கம் மற்றும் மகாராஷ்டிரா அரசின் அதிரடி சலுகைகள் என ஓசூருக்கு செக் வைக்கும் பின்னணி திட்டங்கள் ஏராளம். இதன் மூலம் சத்தமே இல்லாமல் இந்தியாவின் அடுத்த EV கேபிடல் யார் என்பதில் இப்போது ஒரு மெகா யுத்தமே தொடங்கியிருக்கிறது. ஓசூரின் ஆதிக்கம் தொடருமா அல்லது சாம்பாஜி நகர் முந்துமா? முதலீடுகள் இடமாறப் போவதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.

ஓசூர் Vs சாம்பாஜி நகர்

இந்தியாவின் மின்சார வாகன வளர்ச்சி என்றாலே, தமிழ்நாட்டின் ஓசூர் தான் நம் நினைவுக்கு வரும். அரசு வழங்கும் சலுகைகளை நம்பி ஓலா (Ola) மற்றும் ஏத்தர் (Ather) போன்ற ஆரம்பகால நிறுவனங்கள் தங்களின் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களை ஓசூரிலிருந்து உற்பத்தி செய்கின்றன. அதே நேரத்தில், புதிய சலுகைகளுடன் களம் இறங்கியுள்ள சாம்பாஜி நகர், அதையும் தாண்டி ஒரு கூடுதல் பலத்தை கொண்டுள்ளது. குறைந்த உற்பத்தி செலவு ஒருபுறம் இருக்க, பல தலைமுறைகளாக உதிரிபாகங்களை வழங்கும் தகுதியான விநியோகஸ்தர்கள், முதலீடு, திறன் மற்றும் அடுத்த தலைமுறை தலைமை என அனைத்தும் இங்கு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இதைத்தான் தற்போது நிறுவனங்கள் பெரிய அளவில் நம்புகின்றன.

டொயோட்டா ஆலை?

இந்தியாவின் எந்தவொரு வாகன தயாரிப்பிலும் சம்பாஜி நகரின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க பேச்சும் அதற்குப் பலம் சேர்க்கிறது. இந்த சூழலில் தான் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், சாம்பாஜி நகரில் ஆலை அமைப்பதற்கான தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தனது அடுத்த மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல இடங்களை ஆய்வு செய்தது. அதில் மகாராஷ்டிராவின் சாம்பாஜி நகர் மிக முக்கியமான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில், ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த ஆலை அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலையில் மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் ஆகிய இரண்டையுமே தயாரிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. டொயோட்டாவிற்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய நிலம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், டொயோட்டா குழுவினரை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், குறிப்பாக அந்த நகரின் பாரம்பரியத் தொழில் சூழல் அவர்களுக்குப் பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் டொயோட்டா கிர்லோஸ்கரின் பிரதான தொழிற்சாலை கர்நாடக மாநிலம் பிடதியில் அமைந்துள்ளது. சாம்பாஜி நகர் திட்டம் உறுதியானால், அது டொயோட்டாவின் மிகப்பெரிய விரிவாக்கமாக அமையும். இது ஓசூர் மற்றும் பெங்களூருவைச் சுற்றியுள்ள ஆட்டோமொபைல் மண்டலத்திற்கு ஒரு பெரிய போட்டியாகவும் மாறலாம்.

பாதிக்குமா?

இதுவரை தென்னிந்தியா (குறிப்பாக ஓசூர்-சென்னை-பெங்களூரு) தான் ஆட்டோமொபைல் உற்பத்தியின் கோட்டையாக இருந்தது. இப்போது டொயோட்டா மகாராஷ்டிராவை தேர்ந்தெடுப்பது, மற்ற உலகளாவிய நிறுவனங்களையும் அந்த பக்கம் திரும்ப செய்யும். இது தமிழகத்திற்கு வரவேண்டிய புதிய முதலீடுகளை பாதிக்கலாம்.

டொயோட்டா போன்ற பெரிய நிறுவனம் ஓர் இடத்திற்கு சென்றால், அவர்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் நூற்றுக்கணக்கான சிறிய நிறுவனங்களும் அங்கே நகரலாம். இதனால் ஓசூரில் இருக்கும் பல வெண்டர்கள் இப்போது சம்பாஜி நகரில் கிளைகளை தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் ஓசூரிலிருந்து ஒரு காரை வட இந்தியாவிற்கு அனுப்ப ஆகும் செலவை விட, சம்பாஜி நகரிலிருந்து அனுப்புவது மிகக் குறைவு தான். ஆக டொயோட்டா போன்ற நிறுவனங்கள் செலவைக் குறைக்கவே இந்த முடிவை எடுக்கின்றன.

ஓசூர் இதை எப்படி சமாளிக்கும்?

ஓசூரை அவ்வளவு எளிதில் ஓரம் கட்டிவிட முடியாது. இருப்பினும் ஓசூர் தனது இடத்தை நிலைநிறுத்த சில விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என கூறும் நிபுணர்கள், மகாராஷ்டிரா அரசு அளிக்கும் சலுகைகளுக்கு இணையாக அல்லது அதைவிட மேலாக தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும். சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுடன் ஓசூரை இணைக்கும் வேகமான சரக்கு வழித்தடங்களை மேம்படுத்த வேண்டும். இது ஓசூரில் உற்பத்தியை அதிகரிக்க உதவிகரமாக இருக்கலாம். மேலும் வெறும் உதிரி பாகத் தயாரிப்புடன் நிற்காமல், EV சாப்ட்வேர் மற்றும் பேட்டரி ஆராய்ச்சி மையங்களை ஓசூரில் அதிகப்படுத்த வேண்டும். இது தொழில்நுட்ப ரீதியாகவும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கலாம்.

Share This Article English summary

Is Sambhajinagar overtaking Hosur as India’s new EV hub?

While Hosur remains a major player, Sambhajinagar is emerging as a rival by offering lower costs, generational vendor expertise, and strategic proximity to northern markets. Story first published: Sunday, January 25, 2026, 15:27 [IST] Other articles published on Jan 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *