கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!!
News oi-Vignesh Rathinasamy By Vignesh Rathinasamy Published: Saturday, December 6, 2025, 12:21 [IST] Share This Article
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், நாடு முழுவதும் விமானங்களின் இயக்கம் குழப்பத்தில் உள்ளது. இந்தக் குழப்பம் இப்போது 5-வது நாளாக தொடரும் நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பயணச் சீட்டுகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டன.
இண்டிகோ நிறுவனம், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அடுத்த சில நாட்களிலும் விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாம் என்று அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து செல்லும் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளையும் இண்டிகோ ரத்து செய்தது. டிசம்பர் 15ஆம் தேதி வரை பயணச் சீட்டுகளை ரத்து செய்யவோ அல்லது பயணத் தேதியை மாற்றவோ கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் சலுகை அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், வெளி ஊர்களில் இருந்து சரியான நேரத்தில் விமானம் வந்து சேராததால், சுமார் 6 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. இதன் காரணமாக, பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
டிக்கெட் விலை உயர்வு : விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததால், உள்நாட்டுப் பயணச் சீட்டுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் முதல் டெல்லி வரை ரூ.24,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முதல் சென்னை வரை ரூ.50,000 வரையும், திருவனந்தபுரம் முதல் பெங்களூரு வரை ரூ.24,000 வரையும், திருவனந்தபுரம் முதல் ஹைதராபாத் வரை ரூ.49,000 வரையும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் தற்போது ஏர் இந்தியா விமானங்கள் மட்டுமே அதிகம் கிடைப்பதாலும், சென்னை மற்றும் பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை இல்லாததாலும், ஒரு இடத்தில் இறங்கி (Layover) செல்ல வேண்டியிருப்பதாலும், மொத்தப் பயண நேரம் 5 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால் பயணிகளுக்குச் செலவும் நேர விரயமும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய விடுமுறை காலம், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டினர் இந்தியாவுக்கும் அதிகம் பயணம் செய்யும் ஒரு காலமாகும்.
இண்டிகோ நிறுவனம் திடீரென விமானங்களை ரத்து செய்வது மற்றும் தாமதப்படுத்துவது, இந்தப் பயணத் திட்டங்களில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிறுவனம் தனது சேவைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக DGCA-க்கு (விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) அறிவித்துள்ளதால், இந்த நிலைமை விடுமுறை நாட்கள் வரை நீடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லவோ அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவோ திட்டமிட்ட மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல், பலரும் தங்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களை கடைசி நேரத்தில் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பலரும் தங்கள் பயணத்தையே ரத்து செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Share This Article English summary
IndiGo Disruptions May Spoil Christmas and New Year Plans for Travelers
IndiGo flight cancellations and delays are causing significant inconvenience for passengers. The disruptions are also expected to impact travelers planning their Christmas and New Year holidays. Story first published: Saturday, December 6, 2025, 12:21 [IST] Other articles published on Dec 6, 2025
