மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 15:18 [IST] Share This Article
இந்தியாவில் அண்மைக்காலமாக தங்கத்தை நகையாக வாங்கி அணியும் போக்கு மாறி இருக்கிறது. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டியதை அடுத்து ஏராளமான மக்கள் மாற்று வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர்.
டிஜிட்டல் தங்கம்: ஒரு சவரன் தங்க நகையாக வாங்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் தேவை. அதுவே 24 கேரட் தங்கம் வாங்கலாம், குறைந்தது 10 ரூபாய் முதலே வாங்கலாம் கடைக்கு எங்கும் செல்ல தேவையில்லை, போனிலேயே ஒரு செயலி மூலமாகவே வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள். அப்படி தான் இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் என்பது பிரபலமானது.

ஏன் பிரபலம்: பேடிஎம் ,போன்பே போன்ற ஃபிண்டெக் நிறுவனங்கள் ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற நகை விற்பனை நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் டிஜிட்டல் தங்கத்தை விற்கின்றன. அதாவது நாம் பணத்தை முதலீடு செய்தால் அவர்கள் அதற்கு 24 கேரட் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பார்கள். இதற்கு தங்கத்திற்கான பணம், பராமரிப்பு தொகை , 3% ஜிஎஸ்டி ஆகியவை வசூல் செய்யப்படும்.
இந்த ஆண்டு முதலீடு அதிகம்: இந்தியாவில் யுபிஐ மேலாண்மை செய்யக்கூடிய என்பிசிஐ வெளியிடும் தகவலின் படி பார்த்தால் யுபிஐ பரிவர்த்தனை வாயிலாக ஜனவரி மாதம் 760 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இது பிப்ரவரியில் 813 கோடி, மார்ச்சில் 866 கோடி , ஏப்ரலில் 978 கோடி என படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 1,180 கோடி ரூபாய் என உச்சம் அடைந்துள்ளது.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல: டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு எந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்பதற்கு இந்த தரவுகளே சாட்சி. ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு ஏற்ப இது ஒரு பாதுகாப்பான தங்க முதலீடு கிடையாது என செபி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் தங்கம் என்பது செபி போன்ற அரசு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தயாரிப்போ முதலீடோ கிடையாது .
Also Read
2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!
ஏன் ஆபத்து: யார் வேண்டுமானாலும் ஒரு செயலியை உருவாக்கி நான் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கிறேன் நீங்கள் வாங்குங்கள் என விளம்பரம் செய்யலாம். யாரிடமும் அவர்கள் தங்களிடம் தங்கம் இருக்கிறது, நீங்கள் கொடுத்த பணத்திற்கு நாங்கள் தங்கத்தை வாங்கி இருக்கிறோம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

வெளிப்படைத்தன்மை: இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தான் கோல் ஈடிஎஃப், தங்க பத்திரம், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. இவை வெளிப்படையாக இருக்கும். ஒரு யூனிட்டின் விலை என்ன , அதை எங்கெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் அதில் எவ்வளவு லாபம் வந்தது என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இவர்கள் செபியிடம் வழங்கியாக வேண்டும். எனவே ஏமாற்றுவதற்கு வாய்ப்பு குறைவு.
நம்பிக்கை அடிப்படையில்: ஆனால் டிஜிட்டல் தங்கத்தை தயாரிப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படவில்லை யாருக்கும் அவர்கள் பதில் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை பொருத்தவரை ஒரு செயலியில் உங்கள் பணத்தை வழங்குவீர்கள், அதற்கு நிகராக டிஜிட்டல் தங்கத்தை வாங்கி நாங்கள் ஒரு இடத்தில் சேமித்து வைக்கிறோம் என அந்த நிறுவனம் உங்களுக்கு கூறும், இதற்கு உங்களிடையே ஒரு ஒப்பந்தம் என்பது உருவாகிறது. நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இது நடக்கிறது.
Recommended For You
2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
சட்ட பாதுகாப்பு இல்லை: தங்கத்தை அவர்கள் உண்மையாகவே வாங்கினார்களா உங்களுடைய பெயரில் எடுத்து சேமித்து வைத்திருக்கிறார்களா பராமரிக்கிறார்களா எதுவுமே உங்களுக்கும் தெரியாது அரசு சார்பிலும் யாரும் அவர்களை கண்காணிக்கவும் கவனிக்கவும் போவது கிடையாது. இதுதான் டிஜிட்டல் கோல்டு முதலீட்டில் இருக்கும் சிக்கல். திடீரென அந்த நிறுவனம் திவால் ஆகிவிட்டது அல்லது திடீரென அந்த செயலி, செயல்படாமலே நின்று விட்டது எனும்போது நீங்கள் என்ன செய்ய முடியும் அவ்வளவுதான் உங்களுடைய பணம் கைவிட்டு போய்விட்டது. சட்ட ரீதியான பாதுகாப்பு அரசாங்கம் சார்பாக உதவியோ எதுவுமே உங்களுக்கு கிடைக்காது.
நகை சீட்டு போல: ஏனெனில் இது அரசின் எந்த ஒரு அமைப்பாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு முதலீட்டு திட்டம் கிடையாது . நம்பிக்கை என்ற ஒரு வார்த்தை அடிப்படையில் மட்டுமே இந்த டிஜிட்டல் கோல்டு முதலீடு என்பது நடக்கிறது உதாரணமாக தங்க நகை சீட்டுகளை நாம் கூறலாம். நம்பிக்கை அடிப்படையில் தான் ஒரு நிறுவனத்தை நம்பி பணத்தை மாதம் போடுகிறோம் அதற்கு நிகரான தங்கம் நம் பெயரில் வரவு வைக்கப்பட்டு 11 மாதங்கள் முடிவடையும் போது நாம் நகையாக வாங்கிக் கொள்கிறோம்.
You May Also Like
45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?
பணம் போனால் அவ்வளவுதான்: இந்த இரண்டு விஷயங்களிலுமே குறிப்பிட்ட அந்த நிறுவனம் திடீரென கடையை இழுத்து மூடிவிட்டது அல்லது திவாலாகிவிட்டது, முதலாளி ஊரை விட்டு தப்பி ஓடி விட்டார் எனும் போது நீங்கள் முதலீடு செய்த பணம் கிடைக்காது. போலீசில் புகார் அளிக்கலாம் வழக்கு போடலாம் ஆனால் அது பல காலத்திற்கு சென்று கொண்டிருக்கும் தவிர உங்களுக்கு கிடைப்பது கடினம்.
எளிமை, நவீனம்: டிஜிட்டல் கோல்டினை பொறுத்தவரை வெளிப்படை தன்மை என்பது குறைவு . மேலும் ஒவ்வொரு செயலிகளும் ஒவ்வொரு விதமான கட்டணத்தை விதிக்கின்றன. இதனை தாண்டி உங்களுடைய தங்கத்தை சேமிப்பது , பராமரிப்பது என கணிசமான அளவு கட்டணத்தை விதிப்பார்கள். இவை பார்ப்பதற்கு எளிமையானதாகவும் நவீனமானதாகவும் தோன்றலாம் ஆனால் பாதுகாப்பற்றது.
ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் நிலை: அப்படி என்றால் ஏற்கனவே டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்தவர்களின் பணம் அவ்வளவு தானா அது கிடைக்காதா என்ற சந்தேகம் எழலாம். ஆனால் செபியின் இந்த அறிவிப்பு ஒரு எச்சரிக்கை தான். ஏற்கனவே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் இதை நினைத்து பதற்றம் அடைய வேண்டாம், ஆனால் தங்கள் கைவசம் இருக்கக்கூடிய டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தை ஈடிஎஃப் போன்ற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். நீங்கள் எப்படி டிஜிட்டல் தங்கத்தை வாங்குகிறீர்களோ அதே போல இன்னும் நம்பிக்கையான முறையில் பாதுகாப்பான முறையில் கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யலாம் என கூறுகின்றனர்.
Share This Article English summary
Why SEBI issued sudden warning about digital gold? What should investors do now?
The Securities and Exchange Board of India’s (SEBI) recent advisory has drawn fresh attention to Digital Gold. Here is what the investors should do now. Story first published: Thursday, November 13, 2025, 15:18 [IST] Other articles published on Nov 13, 2025
