2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் – பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா?

befunky-collage80-1769917949

  Market update

2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் – பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா?

Market Update oi-Pugazharasi S By Published: Sunday, February 1, 2026, 9:23 [IST] Share This Article

பங்குச் சந்தையில் எப்போதுமே ஒரு கணக்கு உண்டு, எது உயரே உயரே செல்கிறதோ, அது ஒரு நாள் கீழே வந்தே தீர வேண்டும். ஆனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்டுள்ள 30% சரிவு என்பது வெறும் சரிவு அல்ல, அது ஒரு பிளாஷ் கிராஷ் என கூறப்படுகிறது.

வரலாற்று உச்சத்தில் இருந்த வெள்ளி கிலோவுக்கு 4.2 லட்சம் ரூபாயிலிருந்து 3.3 லட்சம் ரூபாயாகவும், தங்கம் 10 கிராமுக்கு 1.8 லட்சம் ரூபாயில் இருந்து 1.6 லட்சம் ரூபாயாகவும் சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது. திடீரென ஏற்பட்ட இந்த சரிவால் முத்தூட் பைனான்ஸ் (கடனுக்கான பாதுகாப்பு மதிப்பு குறைதல்) மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் (வெள்ளி உற்பத்தி லாபம் பாதிப்பு) போன்ற ஜாம்பவான் பங்குகள் பட்ஜெட் நாளான இன்று ரத்த களரியை சந்திக்குமா? அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்க போகும் இறக்குமதி வரி குறைப்பு இந்த மெட்டல் பங்குகளுக்கு ஒரு உயிர்நாடியாக அமையுமா? சரிவை சாதகமாக்கி தங்கம் வாங்கலாமா அல்லது இது ஒரு பொறியா? என விரிவாக பார்ப்போம்.

2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் - பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா?

வரலாறு காணாத சரிவு!

கடந்த வாரத்தின் இரண்டாம் பாதியில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது, திடீரென கணிசமான சரிவை கண்டன. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடும் வீழ்ச்சியை சந்தித்த விலை உயர்ந்த உலோகங்கள், அடிப்படை உலோகங்கள் என அனைத்தும், முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தில் இருந்து வெளியேறுவதற்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. அந்த அளவுக்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தது. சந்தை தரகர்கள் கூட, இந்த அளவிலான ஆட்டத்தை இதுவரை பார்த்ததில்லை என கூறுகின்றனர். குறிப்பாக தங்கம் 13% மேல் சரிந்தும், வெள்ளி கிட்டத்தட்ட 21% சரிந்தும் நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு சரிந்தன. இதே சர்வதேச சந்தையில் இரண்டு வர்த்தக தினங்களில் தங்கம் சுமார் 17% சரிந்தும், வெள்ளி சுமார் 30% சரிந்தும் காணப்பட்டது. இந்த சரிவானது அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ்-ஐ அறிவித்த நிலையில் ஏற்பட்டது. ஏனெனில் தற்போது ஹோல்டு செய்யப்பட்டுள்ள வட்டி விகிதமானது பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே தான் தங்கம் மற்றும் மற்ற உலோகங்களும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டது.

தங்கம், வெள்ளி சரிவால் பங்குகள் பாதிப்பு?

கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கத்தை சார்ந்து வணிகம் செய்து வரும் முத்தூட் பைனான்ஸ் பங்கானது 7% சரிந்து, 3,818 ரூபாயாக காணப்பட்டது. இதேபோன்று மணப்புரம் பைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகளும் 4% சரிவைக் கண்டன. ஏனெனில் தங்கத்தின் மதிப்பு குறையும் போது, இவர்களின் லாப வரம்பும் குறையும்.

மேற்கண்ட ஏற்ற இறக்கத்தின் மத்தியில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதி மார்ஜின் உயர்வு செய்யப்பட்டது. இது ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான் என்றாலும், எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் லாப வரம்பு சரியலாம். இந்த சூழலில் தான் இந்த பங்கின் மீதான ஆர்வமும் குறைந்தது. இதனிடையே தான் இப்பங்கானது 6% மேலாகவும், இந்தியாவின் மிகப்பெரிய வெள்ளி உற்பத்தியாளரான ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்கானது 12.5% ஆகவும், வேதாந்தா பங்கானது 11% அதிகமாகவும் சரிவைக் கண்டன.

நிபுணர்கள் கருத்து என்ன?

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் சரிவு என்பது, நீண்ட கால விலை ஏற்றத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் தங்களின் லாபத்தை வெளியே எடுத்ததால் ஏற்பட்ட ஒரு சாதாரண மாற்றமே தவிர, இது சந்தையின் அடிப்படை கட்டமைப்பில் ஏற்பட்ட சரிவு அல்ல.

அமெரிக்க டாலரின் வலுவான உயர்வு மற்றும் பத்திர வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டாலும், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் தங்கத்திற்கான ஆதரவு குறையவில்லை. உலகளாவிய நிச்சயமற்ற சூழல், மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது மற்றும் சந்தையில் நிலவும் குறைந்த விநியோகம் ஆகியவை விலையை தொடர்ந்து தாங்கி பிடிக்கலாம். எனவே முதலீட்டாளர்கள் இந்த விலை வீழ்ச்சியை ஒரு வாங்கும் வாய்ப்பாக வேண்டுமே தவிர, பயப்படத் தேவையில்லை.

சந்தையில் நிலவும் ஊகங்கள் மற்றும் பட்ஜெட் தாக்கம்!

ஆனந்த் ரதி தரகு நிறுவன அறிக்கையின் படி, தற்போது நிலவும் விலையில் ஏற்பட்டுள்ள கடும் மாற்றங்களுக்கு முக்கியக் காரணம், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த ஊகங்களே. அடுத்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை தரவுகள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதே சமயம், இந்திய முதலீட்டாளர்களின் முழு கவனமும் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மீதே உள்ளது. பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி கட்டமைப்பில் ஏதேனும் மாற்றம் அறிவிக்கப்பட்டால், அது நேரடியாக எம்சிஎக்ஸ் சந்தை விலையில் எதிரொலிக்கும். ஆக சந்தை ஒரு நிலையான நிலைக்கு வரும் வரை, அடுத்த சில அமர்வுகளுக்கு இந்த அதிரடி ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

ஆக மேற்கண்ட பங்குகள் அனைத்தும் பட்ஜெட்டில் முக்கிய மாற்றங்கள் வந்தாலும், அதற்கான எதிரொலி அடுத்து வரும் நாட்களிலும் தொடரலாம். மேலும் மேற்கண்ட சரிவானது நிரந்தரமானதும் அல்ல. ஆக முதலீட்டாளர்கள் பயமில்லாமல் காத்திருக்கலாம் என்பதே நிபுணர்களின் கணிப்பாகவும் உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold & Silver Crash Up to 30%—Why Hindustan Zinc, MCX, and Muthoot Finance are in the Spotlight on budget day?

Precious metals crashed up to 30%, impacting Hindustan Zinc, Muthoot Finance, and MCX, as traders eye Budget 2026 for duty-cut relief. Story first published: Sunday, February 1, 2026, 9:23 [IST] Other articles published on Feb 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *