வெள்ளி விலை வீழ்ச்சி:இப்போதே விற்க வேண்டுமா? தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதா?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 17:41 [IST] Share This Article
தொடர்ந்து கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, தற்போது திடீர் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் வெள்ளியை விற்பனை செய்வது மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $91.17 என்ற முக்கிய ஆதரவு மட்டத்திற்கு அருகில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
இந்த விலைக்கு கீழ் வெள்ளி சரிந்தால், அது இன்னும் பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா? அல்லது இது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பா? இப்போதே இருப்பை விற்க வேண்டுமா அல்லது விலை குறையும் போது இன்னும் அதிகமாக வாங்க வேண்டுமா? சந்தை வல்லுநர்களின் கணிப்புகள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த முழுமையான அலசல் இதோ..

ஏன் திடீர் சரிவு?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த சில தினங்களாக ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில் உள்ளது. 95.87 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட வெள்ளி, தற்போது திடீரென சரிந்து 91.17 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கியமாக கிரீன்லாந்து விவகாரம் குறித்து டிரம்ப் அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை மையமாக வைத்து ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்திருந்த வரி மிரட்டல்களை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளார். இது உலகளாவிய போர்ப் பதற்றத்தை தற்காலிகமாக குறைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், வெள்ளியை விடுத்து, பங்குச்சந்தையை நோக்கித் திரும்பியுள்ளனர். இந்த சூழலில் தான் முதலீட்டாளர்கள் உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் லாபத்தை பதிவு செய்த நிலையில், விலையானது சரிவைக் கண்டு வருகிறது. மேலும் இதை ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்து வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தையும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதுவும் வெள்ளியின் விலை குறைய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளி மேலும் குறைய வாய்ப்புள்ளதா?
அமெரிக்க அரசின் அறிவிப்பை அடுத்து பாதுகாப்பு புகலிடங்களாக பார்க்கப்படும் தங்கம், வெள்ளியின் தேவையானது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. நிபுணர்கள் மேற்கொண்டு பங்குச் சந்தைகளானது வலுவடையும் பட்சத்தில், வெள்ளி விலையானது மேலும் குறையலாம். இது சந்தையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து எவ்வளவு தூரம் இருக்கலாம் என்பது இருக்கும். இருப்பினும் குறுகிய காலத்தில் சந்தையானது அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் ஸ்டாப் லாஸ் முறையை பின்பற்ற வேண்டும்.
மேலும் அமெரிக்காவின் வட்டி விகித கொள்கை மற்றும் கிரீன்லாந்து விவகாரத்தில் ஏற்படும் அடுத்தக்கட்ட நகர்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எப்படி இருப்பினும் வெள்ளியின் தொழில்துறை தேவையானது, விலையை பெரிய அளவில் சரிய விடாமல் தடுக்கலாம். ஆக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைப்பதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த சரிவை பயன்படுத்தி சிறு சிறு தொகையாக முதலீடு செய்யலாம்.
வெள்ளியை போன்றே தங்கம் விலையும் சரிவில் காணப்படுவதும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான ஆலோசனையுடன் வாங்குவது குறித்து திட்டமிடுவது சிறப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why is silver retreating from its record highs, and will it break below the crucial $91.17 support level?
Silver prices fell due to profit booking and easing geopolitical tensions. Investors are shifting funds to equities as global trade risks diminish. Story first published: Thursday, January 22, 2026, 17:41 [IST] Other articles published on Jan 22, 2026
