வெறும் 2 லட்சத்தில் தொடங்கி ரூ8300 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாதனை பெண்!சக்சஸ் பிசினஸ் எம்பயர்! – Allmaa

befunky-collage2-1769320659

  செய்திகள்

வெறும் 2 லட்சத்தில் தொடங்கி ரூ8300 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாதனை பெண்!சக்சஸ் பிசினஸ் எம்பயர்!

News oi-Pugazharasi S By Published: Sunday, January 25, 2026, 11:28 [IST] Share This Article

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் இங்கு ஒரு பெண் தன் வைராக்கியத்தால் தன் விதியை மாற்றி எழுதியிருக்கிறார்.

வாழ்க்கை ஒரு பெண்ணை தனித்து விட நினைத்த போது, அவள் உடைந்து போவாள் என்றுதான் இந்த உலகம் எதிர்பார்த்தது. கையில் வெறும் 2 லட்சம் ரூபாய் சேமிப்பு, இதயத்தில் கனன்று கொண்டிருந்த கனவு, மடியில் ஒரு குழந்தை என தனது பயணத்தை தொடங்கிய அந்த தாயின் முன்னே நின்றது சவால்கள் நிறைந்த ஒரு நீண்ட பாதை. ஆனால், அவர் கண்டது தோல்விகளை அல்ல, அவை கற்றுத்தந்த பாடங்களை.

வெறும் 2 லட்சத்தில் தொடங்கி ரூ8300 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி சாதனை ! சக்சஸ் பிசினஸ் எம்பயர்!

துரோகங்கள், அவமானங்கள் மற்றும் சமூகத்தின் ஏளனப் பேச்சுகள் என அனைத்தையும் தன் வெற்றிக்கு உரமாக்கிய அந்த பெண், இன்று 8,300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியுள்ளார்.சொல்லப்போனால் இது வெறும் லாபத்தை பற்றிய கதை அல்ல. பல சவால்கள் நிறைந்த இவ்வுலகில் தனி ஒரு ஆளாய் தன் உழைப்பால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வீரப்பெண்மணியின் வெற்றியை தான். வெறும் இருநூறு ரூபாய்க்கு போராடிய ஒரு தாய், இன்று எட்டாயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி? அந்த உத்வேகமான வெற்றி பக்கங்களை இப்போது பார்க்கலாம்.

யார் அந்த பெண்மணி!

மீரா குல்கர்னி, இன்று இந்தியாவின் முன்னணி சொகுசு ஆயுர்வேத அழகு சாதன பிராண்டான பாரஸ்ட் எசென்ஷியல்ஸ்(Forest Essentials) நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்திருப்பது, சிறந்த மன உறுதிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் ஒரு சான்றாகும். இன்று அவரது நிறுவனம் 8,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாக இருக்கலாம், ஆனால் இந்த வெற்றியை அடைய அவர் கடந்த வந்த பாதை அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

கசப்பான திருமண வாழ்க்கை?

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த மீரா, பெரும்பாலான பெண்கள் நினைப்பது போல, திருமணத்திற்கு பிறகு கணவருடன் சந்தோஷமான, ஒரு நிலையான வாழ்க்கை அமையும் என பல்வேறு கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் நுழைந்தார். இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் சென்றவருக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. மீராவின் கணவரின் தொழில் நஷ்டமடைய தொடங்கியது. தொழிலில் ஏற்பட்ட தோல்வியால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இது அவர்களது குடும்ப வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அந்த துயரமான வாழ்க்கையில் இருந்து வெளியேறிய மீரா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனியாக குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்.

45 வயதில் புதிய தொடக்கம்!

பல போராட்டங்களை சந்தித்து ஒரு வழியாக தனது 45 வயதில், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மீது தனக்கிருந்த காதலை ஒரு தொழிலாக மாற்ற முடிவெடுத்தார். கையில் வெறும் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில், 2000-ம் ஆண்டில் பாரஸ்ட் எசென்ஷியல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். ஆயுர்வேத பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே சமயம் நவீன காலத்திற்கு ஏற்ற ஆடம்பரமான தோற்றத்துடன் அழகு சாதன பொருட்களை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதோடு ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில், தனது வீட்டின் சமையலறையிலேயே, கையால் செய்யப்பட்ட சோப்புகள் மற்றும் எண்ணெய்களை தயாரித்து பரிசோதனை செய்தார். தரம் மற்றும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அவரது தயாரிப்புகள், விரைவிலேயே வாடிக்கையாளர்களிடையே பிரபலமடைந்தன.

ஆலமரமாய் வளர்ந்த ஆயுர்வேதம்!

மீராவின் சமையலறையில் தொடங்கிய சிறு தொழில் ஆனது, ஆலமரமாய் பரவ தொடங்கியது. சந்தையில் பல அழகு சாதன பொருட்கள் இருந்தாலும், பாரஸ்ட் எசென்ஷியல் பிராண்டுகள் தனித்துவமாக இருந்தன. தரத்தில் எந்த சமரசமும் இன்றி, பழமை மாறா வண்ணம் தயாரிப்புகளை உருவாக்கினார். அப்படி பார்த்து பார்த்து தயாரித்த பொருட்களை, மிகவும் நேர்த்தியான ஆடம்பர அனுபவமாக மாற்றியதில், அவரின் பேக்கேஜிங் முறைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆரம்ப காலத்தில் உள்நாட்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர், அதன் பிறகு சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து, நியூயார்க் முதல் லண்டன் வரை விரிவடைந்தார். இந்திய ஆயுர்வேதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்ப தொடங்கினார். சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினாலும், தனது பிராண்டின் அடிப்படைத் தன்மையான இந்திய பாரம்பரியம் மற்றும் ஆயுர்வேதம் சிதையாமல் இருப்பதை உறுதி செய்தார்.

சிறு சமையலறையில் தொடங்கிய இந்த முயற்சி, இன்று உலகை ஆளும் மிகப்பெரிய பிராண்டாக வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 130-க்கும் அதிகமாக பிரத்யேக விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து, இந்திய ஆயுர்வேதத்தின் பெருமையை உலகறிய செய்துள்ளது.

ஆயுர்வேதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தலை முதல் கால் வரை அனைத்து தேவைகளுக்கும் தரமான தயாரிப்புகளை வழங்குகிறது. சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, உடல் பராமரிப்பு, ஆரோக்கியத்திற்கான பொருட்கள் என பல பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 432 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதனிடையே இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 8,300 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பை மீரா அவ்வளவு எளிதில் எட்டவில்லை. பல சவால்கள், முட்டுக் கட்டைகள் என பலவற்றையும் சந்தித்தார். ஆனாலும் அவரின் விடா முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தான் இந்த பாரஸ்ட் எசென்ஷியல் நிறுவனம்.

Share This Article English summary

From Divorce to a Rs 8,300 Crore Empire: How did this single mother turn just Rs2 lakh into India’s top luxury brand?

Single mother Mira Kulkarni transformed a Rs 2 lakh investment into Forest Essentials, a Rs 8,300 crore luxury Ayurvedic empire.. Story first published: Sunday, January 25, 2026, 11:28 [IST] Other articles published on Jan 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *