ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 14:13 [IST] Share This Article
கிராமத்தில் இருந்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும், தொழில் தொடங்க துடிக்கும் பெண்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு எனலாம். அரசு வேலைக்காகக் காத்திருக்க வேண்டாம். சொந்தமாக தொழில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்ட இது ஒரு சிறந்த நேரம் எனலாம்.
சாதாரண ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை அல்லது பன்றி வளர்ப்பு தொழிலாக இருந்தாலும் சரி, அவற்றை பெரிய அளவில் தொடங்க மத்திய அரசு இப்போது 50 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கி வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மை தான். அது தேசிய கால்நடை இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை எப்படி அணுகுவது, எப்படி விண்ணப்பிப்பது, எந்தெந்த தொழிலுக்கு 50% மானியம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேசிய கால்நடை இயக்கம் (NLM) என்றால் என்ன?
தேசிய கால்நடை இயக்கம் என்பது இந்தியாவின் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும். இது கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு மற்றும் தீவன மேம்பாடு ஆகிய துறைகளின் கீழ் நீண்ட கால மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் (Ministry of agriculture and farmers welfare) கீழ் உள்ள கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
NLM திட்டத்தின் நோக்கங்கள்?
கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தியை அதிகரித்தல், அதன் தரத்தை அதிகரித்தல், கால்நடை வளர்ப்புக்கான செலவினங்களை குறைப்பது, இனப்பெருக்க திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், சந்தை அணுகலை வழங்குதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் என பலவற்றையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இந்த திட்டம் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு நிதி உதவி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சிறந்த வளர்ப்பு முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு விரிவான திட்டமாகும்.
NLM-ன் கீழ் உள்ள தொழில்கள் & மானியங்கள்
தேசிய கால்நடை இயக்கமானது பொதுவாக தொழில் முனைவோரை உருவாக்கவும், பின்வரும் துறைகளில் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் நிதியுதவி வழங்குகிறது.
செம்மறி ஆடு வளர்ப்பு: ஆடு அல்லது செம்மறி ஆட்டு பண்ணை அமைக்க உதவும் இந்த திட்டம், ஒரு பண்ணைக்கு சுமார் 500 தாய் ஆடுகள் மற்றும் 25 கிடாக்கள் வரை அமைக்க உதவுகிறது. இதன் மொத்த திட்டச் செலவில் 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மானியம் போக மீதமுள்ள தொகையை தொழில் முனைவோர், வங்கி கடன் மூலமாகவோ அல்லது சொந்த முதலீடு மூலமாகவோ திரட்ட வேண்டும். மேற்கண்ட மானியமானது பண்ணை கொட்டகை கட்டுமானம், உயர்தர ஆடு அல்லது செம்மறி ஆடுகளை வாங்குவது, தீவன ஆலைகள் மற்றும் சேமிப்பு வசதிகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் செலவுகளுக்கு பொருந்தும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் அமைக்க இருக்கும் பண்ணையின் மாதிரி, செலவுகள், வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும். அதை கொண்டு NLM-ன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அதில் நீங்கள் தயார் செய்த திட்ட அறிக்கை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள், நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கிக் கடன் ஒப்புதல் கடிதம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை மாநில மற்றும் மத்திய அரசுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்கள்.
கோழி வளர்ப்பு & பன்றி வளர்ப்பு
ஆடு வளர்ப்பு போன்றே கோழி வளர்ப்புக்கும் உதவும் இந்த திட்டமானது, கோழிப் பண்ணை அமைக்கவும், கோழிக்குஞ்சு பொரிப்பகம் அமைக்கவும் உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1000 தாய் பறவைகள் ஒரு பண்ணையில் இருக்க வேண்டும் என்கிறது. இதன் மொத்த திட்டச் செலவில் 50% வரையில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 25 லட்சம் வரையிலும், பன்றி வளர்ப்பிற்கு 30 லட்சம் ரூபாய் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது, திட்டத் தொடக்கத்தின் முதலில் ஒரு தவணையாகவும், திட்டம் முடிந்த பின்னர் இரண்டாவது தவணையும் என பிரித்து தரப்படுகிறது. ஆக இந்த திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் தங்கள் திட்டங்களுக்கு ஏற்ப மானிய சலுகையை பெற முடியும்.
Share This Article English summary
Is it possible to get subsidy benefits of up to Rs. 50 lakhs for goat, poultry, and pig farming through NLM scheme?
National Livestock Mission (NLM) provides subsidy support, reaching up to ₹50 lakh, for entrepreneurial projects in goat, poultry and pig rearing. Story first published: Tuesday, December 16, 2025, 14:13 [IST] Other articles published on Dec 16, 2025
