முதலீட்டாளர்களே உஷார்! பட்ஜெட் நாள் வெறும் சீன் தான்-15 ஆண்டு நிஃப்டி தரவு சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 28, 2026, 17:26 [IST] Share This Article
பிப்ரவரி 1, மத்திய பட்ஜெட் நாள். இந்த ஒரு நாள் முழுக்க பங்குச் சந்தை எப்படி இருக்கும் என முதலீட்டாளர்கள் மிக உன்னிப்பாக உற்று நோக்குவது வழக்கம். ஆனால், நிஃப்டி குறியீட்டின் கடந்த 15 ஆண்டுகால வரலாறு ஒரு முக்கியமான உண்மையை போட்டு உடைக்கிறது. பட்ஜெட் தினத்தன்று சந்தையின் நகர்வு மிகவும் குறைவுதான் என்றும், அதற்கு பிந்தைய நாட்களில் ஏற்படும் தெளிவான கொள்கை முடிவுகளால் தான் அதிக லாபம் கிடைப்பதாகவும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. அப்படியானால், பட்ஜெட் தின பரபரப்பு என்பது தேவையில்லாததா? நிதானமாக காத்திருப்பதே சிறந்த முதலீடா? வாருங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பு நிலவும். ஆனால், கடந்த 15 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்தால், பட்ஜெட் தினத்தன்று முதலீடு செய்வதை விட, அதற்குப் பிந்தைய நாட்களில் முதலீடு செய்வதே அதிக லாபம் தருவதாக தெரிய வந்துள்ளது.

தரவுகள் சொல்வது என்ன?
கடந்த 15 ஆண்டுகளில், பட்ஜெட் தினத்தன்று நிஃப்டி 50 குறியீடு சராசரியாக வெறும் 0.19% மட்டுமே மாற்றத்தை கண்டுள்ளது. நிஃப்டி பேங்க் 0.42% மட்டுமே நகர்ந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த ஒரு வாரத்தில் சந்தை சராசரியாக 1.35% முதல் 1.36% வரை லாபத்தை அளித்துள்ளது. இது பட்ஜெட் தின நகர்வை விட 7 மடங்கு அதிகம்.
வழக்கமாக பட்ஜெட்டுக்கு முந்தைய வாரத்தில் சந்தை 0.52% சரிவை சந்திக்கிறது. கொள்கை முடிவுகள் குறித்த தெளிவின்மை காரணமாக முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுப்பதே அதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நடப்பு ஆண்டும் சந்தையில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு பட்ஜெட் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு (2026) பட்ஜெட் – ஒரு சவால்!
வழக்கமாக வார இறுதியில் வரும் பட்ஜெட்டுகள் குறைவான வர்த்தக அளவையே கொண்டிருக்கும். கடந்த காலங்களில் இத்தகைய சமயங்களில் சந்தை 0.66% வரை சரிந்த வரலாறும் உண்டு. ஆக நடப்பு ஆண்டில் அப்படி என்ன நிகழப்போகிறது என்ற பலத்த எதிர்பார்ப்பானது நிலவி வருகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் உலகளாவிய போர் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆக வர்த்தக இழப்புகளை ஈடு கட்டும் விதமாகவும், குறிப்பிட்ட துறைகளுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் இருக்கலாம். மேலும் இது இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராமப்புற தேவைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கலாம்.
முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, பட்ஜெட் தின தலைப்பு செய்திகளை பார்த்து அவசரப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக பட்ஜெட் தின பரபரப்பு என்பது வெறும் சத்தம் மட்டுமே; அது ஒரு நிலையான திசையைக் காட்டாது. பட்ஜெட் முடிந்த பிறகு கொள்கை தெளிவு கிடைக்கும் போது முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why the week after the Budget is more profitable than Budget Day itself: A 15-year Nifty analysis
Data shows Budget Day market moves are minor. Real gains happen a week later once policy clarity emerges, making patient investing more profitable than chasing daily hype. Story first published: Wednesday, January 28, 2026, 17:26 [IST] Other articles published on Jan 28, 2026
