மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..! – Allmaa

befunky-collage20-1765868271

  செய்திகள்

மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..!

News oi-Pugazharasi S By Published: Tuesday, December 16, 2025, 12:28 [IST] Share This Article

கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டத்தை பார்த்தபோது, நடப்பு ஆண்டில் பலவும் சரித்திரம் படைக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கலாம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியானவர்களுக்கு கிடைத்த பலன் என்ன என்று தெரியுமா? ஏனெனில் நடப்பு ஆண்டில் கிரிப்டோ உலகம் ஒரு மிகப்பெரிய புயலை சமாளித்து வந்துள்ளது. அதாவது புதிய ஓழுங்குமுறை விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் தாக்கம் என பலவும் கிரிப்டோகரன்சிகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒருபுறம் பல குழப்பங்கள் இருந்தாலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் அதிகரித்ததால் நல்ல வளர்ச்சியும் காணப்பட்டது. மறுபுறம் திடீர் சரிவும் பல பாடங்களை முதலீட்டாளர்களுக்கு கற்றுக் கொடுத்தது.

ஆக 2025ம் ஆண்டில் கிரிப்டோ சந்தையானது கடந்து வந்த ஏற்ற இறக்க பாதைகள் என்ன, இந்த பயணத்தின் முடிவில் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் கற்றுக் கொண்ட பாடம் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..!

சவால்களும் சாதனைகளும்!

நடப்பு ஆண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் பல மறக்க முடியாத சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது கிரிப்டோகரன்சி சந்தை. புதிய சாதனைகள் படைத்த அதே நேரத்தில், திடீர் சரிவுகளால் அச்சத்தையும் அவ்வப்போது ஏற்படுத்தியது. இருப்பினும் நடப்பு ஆண்டில் தான் முதன் முறையாக உலகளாவிய கிரிப்டோ சந்தையின் சந்தை மூலதனம் 4 ட்ரில்லியன் டாலர்களை தாண்டியது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோ சந்தையானது நேர்மறையான ஏற்றத்துடன் தொடங்கியது. குறிப்பாக கடந்த ஜனவரியில் தான் பிட்காயின் முதன் முறையாக 100,000 டாலர் என்ற எல்லையை தாண்டியது. இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோ முதலீடுகள் பற்றி ஆர்வம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றமும் அமெரிக்காவும்?

அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறையானது தளர்த்தப்பட்டாலும், டிஜிட்டல் சொத்துக்களைக் ஏற்றுக் கொள்வது துரிதமாக்கப்பட்டதாலும், கிரிப்டோகரன்சிகளில் ஒரு எழுச்சி இருந்தது. குறிப்பாக ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப் போன்றவற்றின் தொடர்ச்சியான ஏற்றம், கிரிப்டோ சந்தைக்கு இன்னும் ஆதாரவான சூழலை ஏற்படுத்தியது. அதோடு வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளிலும், பெரிய பெரிய நகரங்கள் தாண்டி சிறு நகரங்களில் கூட பிரதான முதலீடாக மெதுவாக மாறி வருகிறது. இது கிரிப்டோகரன்சி சந்தையில் சாதகமான மாற்றத்திற்கு வழிவகுத்தாலும், நீண்ட கால அடிப்படையில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

ஆண்டு தொடக்கத்தில் சிறப்பான ஏற்றம் காணத் தொடங்கியிருந்தாலும், சர்வதேச சந்தைகளில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போதெல்லாம், அதிக ரிஸ்க்கான முதலீடான கிரிப்டோ போன்றவற்றில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கினர். குறிப்பாக அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகள், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியது, சீனாவுடனான வர்த்தக போர் அச்சங்கள், உலகளாவிய நிதிச் சந்தைகளை பதம் பார்த்தது. இதை மேலும் அச்சத்திற்குள்ளாக்கும் விதமாக புவிசார் அரசியல் பதட்டங்கள் இன்னும் அழுத்தத்தை கொடுத்தன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பய உணர்வை உருவாக்கியது. இது கிரிப்டோகளை நேரடியாகவே பாதித்தது. இதன் காரணமாக கிரிப்டோ சந்தையானது பல வீழ்ச்சிகளைப் சந்தித்தது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியான புவிசார் அரசியல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மோசமான சரிவு இருந்தது. மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளும் கிரிப்டோ சந்தை இனி தனித்து இயங்கவில்லை என்பதையும், அது உலகளாவிய நிதி அமைப்புகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுடன் நேரடியாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் முதலீட்டாளர்களுக்கு உணர்த்தியுள்ளது.

பிட்காயின் உச்சம், எத்திரியம் சரிவு?

நடப்பு ஆண்டு தொடக்கமானது பிட்காயினுக்கு ஒரு உற்சாகமான தொடக்கத்தை கொடுத்தாலும், தற்போது நிலைமையே வேறு. முதன் முறையாக ஜனவரியில் 1 லட்சத்தை தாண்டியது. அக்டோபரில் சந்தை மேலும் வலுவடைந்து 1,26,000 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் அந்த ஏற்றத்திற்கு பிறகு கடும் சரிவைக் கண்ட பிட்காயின், நவம்பரின் 80,000 டாலருக்கு கீழாக சரிவைக் கண்டது. இது நடப்பு ஆண்டு முடிவில் இரு இலக்க சரிவைப் பதிவு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று எத்திரியமும் ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு 4,000 டாலர்களை தாண்டியது. எனினும் 4வது காலாண்டில் 1,600 டாலர்களுக்கு கீழே குறைந்துள்ளது. இது இடிஎஃப்-க்கள் மூலம் திரும்ப பெறுதல் மற்றும் சந்தை மீதான நம்பிக்கை சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில் சுமார் 19% சரிவைக் கண்டது. இதேபோன்று தான் சோலானா மற்றும் பைகாயின் போன்ற பல கரன்சிகளும் சரிவையே பதிவு செய்துள்ளன. இருப்பினும் Zcash எனப்படும் கரன்சியானது நடப்பு ஆண்டில் சிறந்த வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது கிரிப்டோ சந்தையில் வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை அடையாளம் காண்பது கடினம் என்பதையே காட்டுகிறது.

கற்றுக் கொண்ட விஷயங்கள்?

2025ம் ஆண்டில் கிரிப்டோ சந்தையில் நிச்சயமற்ற தன்மை என்ற ஒன்று இல்லை என்பதையே காட்டுகிறது.

உங்கள் முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட், ஆராய்ச்சி, போர்ட்போலியோவில் ஆழமான உத்தி என பலவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளது. இதே 2026ம் ஆண்டிலும் கிரிப்டோ சந்தையானது பல்வேறு வாய்ப்புகளையும் கொடுக்கலாம். சவால்களையும் கொடுக்கலாம். ஆக அவசரப்படாமல், நீண்ட கால கண்ணோட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. மேலும் வலுவான அடிப்படைகள், சரியான ரிஸ்க் மதிப்பீடுகள் மற்றும் பிரித்து முதலீடு செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் பாதுகாப்பை கொடுக்கலாம். எல்லாவற்றுக்க்கும் மேலாக கிரிப்டோகரன்சிகள் முதலீட்டில் உள்ள சவால்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

What are the things that cryptocurrency investors understood in 2025?

Despite the cryptocurrency market experiencing volatility in the current year, the global crypto market cap surpassed $4 trillion for the first time this very year. Story first published: Tuesday, December 16, 2025, 12:28 [IST] Other articles published on Dec 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *