பட்ஜெட் 2026: எகிறும் தங்கம்! மீண்டும் வருமா தங்கப் பத்திரங்கள்? நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 23, 2026, 8:44 [IST] Share This Article
தங்கம் – இது இந்தியர்களின் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஆகச்சிறந்த பாதுகாப்பு கவசம். ஆனால் இன்றைய சூழலில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வருவதால், சாமானிய மனிதனின் தங்க கனவு எட்டாக் கனியாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், 2026 பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி முன்பு வழங்கிய தங்க பத்திரங்கள் (SGB) திட்டத்தை மீண்டும் கொண்டு வருமா என்பதே அனைவரின் ஏக்கமான கேள்வியாக இருக்கிறது. தங்கத்தின் இறக்குமதி சுமையை குறைக்கவும், அதே சமயம் மக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டை வழங்கவும் இதுவே சரியான தருணம். எகிறும் தங்க விலைக்கு மத்தியில், மத்திய அரசு மீண்டும் அந்த தங்க கதவுகளை திறக்குமா? கோடிக்கணக்கான மக்களின் சேமிப்புத் திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் விடை கிடைக்குமா என்பதைப் பார்ப்போம்..

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சந்தை வல்லுநர்களிடமிருந்து வரும் பல்வேறு வரி மற்றும் கொள்கை சார்ந்த பரிந்துரைகளை நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களை தொட்டு வரும் வேளையில், தங்க பத்திரம் (SGB) திட்டத்தை மீண்டும் தொடர கோரிக்கை வலுவடைந்து வருகிறது. சந்தை நிலையற்றதாக இருக்கும் போது, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் முறையாகவும், வரிச் சலுகையுடனும் முதலீடு செய்ய தங்க பத்திரங்கள் ஒரு சிறந்த வழி என்று முதலீட்டாளர்கள் வாதிடுகின்றனர்.
தங்க பத்திரங்களின் சிறப்பு என்ன?
முன்பு இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருந்தபோது, மிகவும் விருப்பமான முதலீடாக இருந்தது. காகித வடிவில் இருப்பதால், தங்கத்தின் தூய்மை, பாதுகாப்பு அல்லது இன்சூரன்ஸ் பற்றிய கவலைகள் இதில் இல்லை. முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தின் விலை உயர்வால் கிடைக்கும் லாபத்துடன் கூடுதலாக, ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டி வழங்கப்பட்டது. மிக முக்கியமாக, 8 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை வைத்திருக்கும்போது, கிடைக்கும் லாபத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
தற்போதைய நிலை என்ன?
தற்போது புதிய தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இது 2024ம் ஆண்டு தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது வரையில் மீண்டும் தொடங்கப்படவில்லை. பிப்ரவரி 2024-ல் வெளியான 2023-24 சீரிஸ் IV தான் கடைசியாக வந்த பத்திரமாகும். பழைய பத்திரங்களுக்கான வட்டி தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு இல்லை.
மீண்டும் கொண்டு வருவது சரியா?
இது குறித்து நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. எனினும் பலரும் தங்க விலை உச்சத்தில் இருக்கும்போது, மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்து முதலீடு செய்ய இது சரியான ஆப்ஷன். இது தங்கம் இறக்குமதியை குறைக்க அரசுக்கும் உதவும் என கூறுகின்றனர். இருப்பினும் தங்கம் விலை அதிகமாக இருப்பதால், அரசுக்கு இந்த பத்திரங்களுக்கு பணம் திருப்பித் தருவது நிதி ரீதியாக சவாலாக இருக்கலாம். ஆக இதுவும் கூட தற்காலிகமாக பத்திர வெளியீட்டை நிறுத்தி வைக்க வழிவகுக்கலாம்.
அரசு சொல்வது என்ன?
மத்திய அரசு இத்திட்டத்தின் அதிகப்படியான செலவு குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, 2015-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், மக்கள் பிசிகல் தங்கமாக (நாணயம், ஆபரணம்) வாங்குவதை குறைத்து, அதை நிதிச் சேமிப்பாக மாற்றுவதுதான். அதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் மூலம் இதுவரை 146.96 டன் தங்கம் (ரூ. 72,275 கோடி மதிப்பு) திரட்டப்பட்டுள்ளது.
ஆனால் உலகளாவிய பதற்றங்களால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அரசு இத்திட்டம் மூலம் கடன் வாங்குவது அதிக செலவு பிடிக்கும் காரியமாக மாறியுள்ளது. எனவே சந்தை நிலவரத்தை பொறுத்தே புதிய பத்திரங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது.
தங்கப் பத்திரங்களின் வரி மற்றும் முதிர்வு விதிமுறைகள்!
தங்க பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5வது ஆண்டிலிருந்து வட்டி வழங்கப்படும் தேதிகளில் வெளியேறும் வசதி உண்டு. இந்த பத்திரங்களின் முதிர்வு காலத்திற்கு 1 மாதத்திற்கு முன்பே முதலீட்டாளர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும். முதிர்வு தொகையானது நேரடியாக, பத்திரம் வாங்கியவரின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். ஆக வங்கிக் கணக்கு அல்லது தொடர்பு விவரங்களில் மாற்றம் இருந்தால், அதை முன்கூட்டியே சம்பந்தபட்ட வங்கியில் புதுப்பிப்பது அவசியம். இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் வரை காத்திருந்தால், முதிர்வின் போது கிடைக்கும் லாபத்திற்கு வரி கிடையாது. ஆனால் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி வருமானம், உங்கள் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு. உங்கள் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். வட்டி வழங்கும் போது அரசு முன்கூட்டியே வரி பிடித்தம் (TDS) செய்யாது. நீங்களாகவே கணக்கு காட்டி வரி செலுத்த வேண்டும்.
நீங்கள் 8 ஆண்டுகள் முடிவில் பத்திரத்தை முதிர்வு செய்தால், கிடைக்கும் லாபத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி கட்டத் தேவையில்லை. இதுதான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இருப்பினும் 12 மாதங்கள் கழித்து முதிர்வு காலத்திற்கு முன்பே வெளியேறினாலே 12.5% நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இதே 12 மாதங்களுக்குள் வெளியேறினால், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக வருமான வரி வரம்பின் கீழ் விதிக்கப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
SGBs Update: Will Budget 2026 reopen the gold bonds?
Investors eagerly await Budget 2026 for the potential relaunch of Sovereign Gold Bonds, seeking a tax-free, interest-bearing alternative to physical gold amid record-high prices. Story first published: Friday, January 23, 2026, 8:44 [IST] Other articles published on Jan 23, 2026
