நிஃப்டி 50-ன் புதிய எஜமானர்கள்! முதல் முறையாக FII-ஐ முந்திய DII: ஓரம் கட்டிய இந்திய சிங்கங்கள்!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 9, 2026, 12:51 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றில் இன்று முக்கியமான நாள். பல தசாப்தங்களாக, அந்நிய முதலீட்டாளர்கள் (FII) தும்மினால், இந்திய சந்தைக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று அந்த பிம்பத்தை நம் நாட்டு முதலீட்டாளர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
டிசம்பர் 2025 காலாண்டு முடிவுகளின்படி, முதல் முறையாக நிஃப்டி 50 நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs), வெளிநாட்டு முதலீட்டாளர்களை (FIIs) முந்தியுள்ளனர். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வட்டி விகித மாற்றங்களால் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று விட்டு வெளியேறியபோது, நாங்கள் இருக்கிறோம் என்று கவசமாய் நின்றது நம் நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளும், எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களும் தான்.

இது வெறும் புள்ளி விவர மாற்றம் அல்ல, கோடிக் கணக்கான இந்திய சாமானியர்கள் மாதா மாதம் செலுத்தும் எஸ்.ஐ.பி (SIP) பணத்தின் வலிமை. வெளிநாட்டு சக்திகள் தீர்மானித்த இந்திய சந்தையின் போக்கை, இன்று இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு தீர்மானிக்க தொடங்கியுள்ளது. அந்நிய முதலீடுகளை ஓரம் கட்டி, இந்தியச் சந்தையின் உண்மையான சிங்கங்களாக உருவெடுத்துள்ள நம் நாட்டு முதலீட்டாளர்களின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இந்திய முதலீட்டாளர்களின் நம்பிக்கை!
இந்திய பங்குச் சந்தையில் ஒரு மாபெரும் முதலீட்டு கட்டமைப்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, இந்தியாவின் முன்னணி 50 நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி 50 (Nifty 50) குறியீட்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை (FIIs) விட இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) அதிக பங்குகளை கொண்டுள்ளனர். இது இந்திய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை!
தரவுகளின்படி, 2025 டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 24.8% அளவுக்கு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதே வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 24.3% அளவுக்கு காணப்படுகிறது. இது கடந்த 8 காலாண்டுகளில் இல்லாத சரிவாகும்.
ஒட்டுமொத்த பங்குச் சந்தையில் ஏற்கனவே உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிஃப்டி 50 குறியீட்டில் இப்போதுதான் முதல் முறையாக இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
ஆனந்த் ரதி குளோபல் பைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நவீன் வியாஸ் கருத்துப்படி, இது ஒரு தற்காலிக நிகழ்வு அல்ல, இது ஒரு நிலையான கட்டமைப்பு மாற்றம். இதற்கு அதிகரித்து வரும் எஸ்.ஐ.பி ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இது கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 3.34 லட்சம் கோடி ரூபாய் நிதியானது எஸ்.ஐ.பி மூலம் இந்திய சந்தைக்குள் வந்துள்ளது. குறிப்பாக பென்ஷன் ஃபண்ட்கள் மற்றும் இபிஎஃப்ஓ (EPFO) ஆகியவற்றிலிருந்து பங்குச் சந்தையில் முதலீடு அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் புதிதாக தொடங்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்நாட்டு முதலீட்டு சூழலை வலுப்படுத்தியுள்ளன.
FII-கள் வெளியேறியும் சந்தை ஏன் சரியவில்லை?
கடந்த 5 ஆண்டுகளில், அந்நிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 9.96 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதற்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் அதிக லாபம் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும் நிஃப்டி 50 குறியீடு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 72% முதல் 75% வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அந்நிய முதலீட்டாளர்கள் விற்கும் பங்குகளை, இந்திய முதலீட்டாளர்கள் (DIIs) வாங்கியது தான் என கூறப்படுகிறது.
யாருடைய கை ஓங்கியது?
டிசம்பர் காலாண்டு முடிவுகளின்படி, நிஃப்டி 50 நிறுவனங்களில் 82% நிறுவனங்களில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளனர். அதேசமயம் கிட்டத்தட்ட 78% நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை குறைத்துள்ளனர். மதிப்பு அடிப்படையில், DII-களின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 24.8 பில்லியன் டாலராகவும். FII-களின் வசம் இருப்பது 24.3 பில்லியன் டாலராகவும் உள்ளது.
எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு அதிகம்?
DII-கள் அதிக முதலீடு செய்த நிறுவனங்களில் டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ட்ரெண்ட் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர், இண்டிகோ உள்ளிட்ட பங்குகள் அடங்கும். இதேபோல் FII-கள் விரும்பி முதலீடு செய்த நிறுவனங்களில் பாரதி ஏர்டெல், ஐஷர் மோட்டார்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஹிண்டால்கோ, விப்ரோ மற்றும் மாருதி சுஸுகி. இண்டிகோ உள்ளிட்ட பங்குகளும் அடங்கும்.
இது நிலைத்து நிற்குமா?
முதலீட்டாளர்களின் இந்த ஆதிக்கம் நிலையானது. சந்தையில் சரிவு ஏற்பட்டாலும், இன்சூரன்ஸ் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் வருவதால், அந்தப் பணம் சந்தையில் இருந்து எளிதில் வெளியேறாது. இந்த மாற்றமானது இந்தியாவின் மூலதனத் தளம் வலுவானதாக மாறியுள்ளதை காட்டுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தற்காலிக பயம் மறைந்தாலும், இந்திய பங்குச் சந்தையின் முடிவுகளை எடுக்கும் இயக்கிகள், இனி இந்திய முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். இது இந்திய சந்தைக்கு நல்ல விஷயம் தான்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
DII’s have officially surpassed FIIs in Nifty 50 shareholding for the first instance in market history
Indian DIIs now hold 24.8% of Nifty50, overtaking FIIs for the first time, driven by record SIP inflows and strengthening India’s domestic investment ecosystem in 2026. Story first published: Monday, February 9, 2026, 12:51 [IST] See More On: fii, investment, முதலீடு Other articles published on Feb 9, 2026
