கமாடிட்டி சந்தையில் நடந்த கோரம் – முதலீட்டாளர்களுக்கு நிதின் காமத் கொடுத்த எச்சரிக்கை!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Saturday, January 31, 2026, 17:36 [IST] Share This Article
பங்குச் சந்தையில் ஒரு லேட்டஸ்ட் பழமொழி உண்டு, படிக்கட்டுகள் வழியாக ஏறும் சந்தை, லிஃப்ட் வழியாகக் கீழே இறங்குமாம். ஆனால், கடந்த வர்த்தக தினத்தில் கமாடிட்டி சந்தையில் நடந்ததோ அதையும் மிஞ்சிய ஒரு கோரத் தாண்டவம் எனலாம்.
வெள்ளி ஒரே நாளில் 30% சரிவு, தங்கம் 15% வீழ்ச்சி என மொத்த உலோக சந்தையும் நிலைகுலைந்து போனது. சாதாரணமாக சந்தை சரியும் போது நஷ்டத்தைத் தவிர்க்க ஸ்டாப் லாஸ் போன்ற பாதுகாப்பு முறைகள் கை கொடுக்கும். ஆனால், நேற்று தப்பிக்க கூட ஒரு சிறிய வழியில்லாமல் சந்தை சர்க்யூட் முறையில் முடங்கியது வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு தரகு நிறுவனமான ஜெரோதாவின் (Zerodha) நிறுவனர் நிதின் காமத், இது குறித்து ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். 10 ஆண்டு கால உழைப்பை ஒரே நாள் வீழ்ச்சி அழித்துவிடும் என அவர் எச்சரிப்பது ஏன்? ரிஸ்க் மேனேஜ்மென்ட் கூட தோற்றுப்போகும் அந்த சூழலில் முதலீட்டாளர்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்வது? நிதின் காமத் பகிர்ந்துள்ள அந்த பாடங்களை விரிவாகப் பார்ப்போம்.
தப்பிக்க வழியே இல்லை!
ஒரு பங்குத் தரகராக சில அரிய நாட்களில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் (Risk Management) எனப்படும் இடர் மேலாண்மை முற்றிலும் வேலை செய்யாமல் போய்விடும். சந்தை அவ்வளவு வன்முறையாக சரிவடையும் போது, வர்த்தகர்கள் தங்களின் மொத்த முதலீட்டையும் தாண்டி இழப்பை சந்திப்பார்கள். இத்தகைய சூழலில், வர்த்தகர் மற்றும் தரகர் என இருவருமே தப்பிக்க வழியின்றி ஒரு இலக்கற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
கடந்த வர்த்தக தினம் கமாடிட்டி சந்தையில் அத்தகைய ஒரு நாள்தான். அனைத்து முக்கிய உலோகங்களும் லோயர் சர்க்யூட் (Lower Circuit) எனப்படும், அன்றைய தினத்தின் அதிகபட்ச சரிவை எட்டின. வெள்ளி 30% வரையிலும், தங்கம் 15% வரையிலும் சரிந்தன. மற்ற உலோகங்களும் இதையே பின்பற்றின. அதேசமயம், இயற்கை எரிவாயு மட்டும் உச்சகட்ட உயர்வை அதாவது அப்பர் சர்க்யூட் ஆகியது.
இப்படி பார்த்ததே இல்லை?
எங்களது 16 ஆண்டுகால அனுபவத்தில், கோவிட் காலத்தில் கச்சா எண்ணெய் விலை மைனஸில் (Negative Price) சென்றபோது மட்டுமே இதுபோன்ற ஒரு சூழலை பார்த்திருக்கிறோம். ஆனால் அப்போது கமாடிட்டி வர்த்தகம் இப்போது இருப்பதை போல அவ்வளவு பிரபலம் அடையவில்லை.
நேற்று கமாடிட்டி சந்தையில் நடந்த இந்த அதிர்ச்சி, ஈக்விட்டி (Equities) எனப்படும் பங்குச் சந்தையிலோ அல்லது 2008-ல் நடந்ததை போன்றோ எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மிகவும் எளிமையானது, ஆனால் மிக முக்கியமானது.
இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க?
உங்களால் எவ்வளவு இழப்பை தாங்க முடியுமோ, அந்த பணத்தை மட்டும் வைத்து வர்த்தகம் செய்யுங்கள். நீங்கள் ஒரு தசாப்த காலமாக (10 ஆண்டுகள்) வெற்றிகரமாக வர்த்தகம் செய்திருக்கலாம், ஆனால் சரியான ரிஸ்க் மேனேஜ்மென்ட் இல்லையென்றால், ஒரே நாளில் அனைத்தையும் இழந்து விடக்கூடும். சந்தை இதுபோன்று சர்க்யூட் அடித்து அதிரடியாக சரியும் போது, உங்கள் நஷ்டத்தை நிறுத்த மார்ஜின் கால் (Margin Call) வரவோ அல்லது வெளியேறவோ (Exit) எந்த வாய்ப்பும் கிடைக்காது. ஆக பாதுகாப்பாக வர்த்தகம் செய்யுங்கள் என ஜெரோதாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிதின் காமத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய பங்குச் சந்தை மற்றும் ஸ்டார்ட்அப் உலகில் நிதின் காமத் ஒரு மிக முக்கியமான ஆளுமை கொண்டவர். இவரின் இந்த பதிவு, நிச்சயம் ஒவ்வொரு முதலீட்டாளரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று தான்.
இப்பதிவுடன் கமாடிட்டியில் உள்ள ஸ்கிரிப்ட்களையும், அதன் வர்த்தக நிலவரத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் இயற்கை எரிவாயு தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் கடும் சரிவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இது முந்தைய தினத்தில் கண்ட அசாதாரணமான சூழலில் மட்டுமல்ல, முதலீட்டாளர்கள், ஒருவரால் எவ்வளவு இழப்பை தாங்க முடியுமோ, அந்த பணத்தை மட்டுமே வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. அதோடு எவ்வளவு தான் பணமே இருந்தாலும், அதை சரியாக நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதும் தவிர்க்க முடியாத ஒரு உண்மை தான். ஆக முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் இன்னும் கூடுதல் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
Share This Article English summary
Gold & Silver Nosedive: Traders Caught in No-Exit Zone—Nithin Kamath Shares Crucial Lessons
Nithin Kamath warns that markets can crash so fast that safety rules fail, trapping traders. only trade with money you are okay with losing. Story first published: Saturday, January 31, 2026, 17:24 [IST]
