இந்தியாவிற்கு எதிரான 25% வரி நீக்கம்?அமெரிக்க கருவூல செயலர் பெசென்ட் வெளியிட்ட முக்கிய தகவல்!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 17:05 [IST] Share This Article
இந்தியா தன் மக்களின் நலனுக்காக எதையும் செய்யும் – இந்தியாவை பற்றிய இந்த பிம்பம் இன்று உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதம், டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் மீது அதிரடியாக 50% வரை இறக்குமதி வரிகளை விதித்த போது, இந்திய பொருளாதாரம் பெரும் சவாலை சந்தித்தது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மையமாக வைத்து விதிக்கப்பட்ட அந்த 25% கூடுதல் வரி, இரு நாடுகளுக்கும் இடையிலான மெளனமான வர்த்தக போராகவே பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்து ஒரு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய கருவூல செயலர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), இந்தியா மீதான அந்த 25% வரிகளை நீக்குவதற்கான பாதை (Path to removal) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வரியை குறைக்கலாம்!
இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளன. இது எங்களின் வரி விதிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவர் குறிப்பிட்டாலும், உண்மையில் இது இந்தியாவின் நிதானமான ராஜ தந்திரத்திற்கும், அமெரிக்காவின் பிடிவாதத்திற்கும் இடையே கிடைத்த ஒரு சமரசப் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. கோடிக் கணக்கான இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ள இந்த செய்தி, 2026-ல் இந்திய பொருளாதாரத்தை ஒரு புதிய பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பெசென்ட், அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி கிடைக்க வாய்ப்புள்ளதாக சூசகமாக கூறியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்டுள்ள அந்த கூடுதல் 25% இறக்குமதி வரியை, டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் குறைக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
500 வரிக்கு வாய்ப்பு இருக்கா?
இது குறித்து ஃபாக்ஸ் பிசினஸ் ஊடக தளத்திற்கு அளித்த பேட்டியில் பெசென்ட், உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க ஆரம்பித்தது. ஆனால் அதிபர் டிரம்ப் 25% வரி விதித்த உடன், இந்தியா தனது வேகத்தை குறைத்து, தற்போது ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது என கூறியுள்ளார்.
அதேசமயம் செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ரஷ்ய எண்ணெயை வாங்கி மறு விற்பனை செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க வேண்டும் என ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், அதிபர் டிரம்புக்கு இவ்வளவு பெரிய வரி விதிக்க ஏற்கனவே IEEPA (சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டம்) மூலம் அதிகாரம் உள்ளது. செனட் சபை அந்த அதிகாரத்தை அவருக்கு மீண்டும் வழங்க விரும்புகிறது என கூறியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
எப்போது வர்த்தக ஒப்பந்தம்?
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், டாவோஸ் 2026 மாநாட்டில் இருந்து வரும் தகவல்கள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மணி கன்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சிறந்த ஒப்பந்தம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Share This Article English summary
US Treasury Sec Scott Bessent Hints at Rolling Back 25% Tariff as Russian Oil Imports Collapse
US Treasury Secretary Bessent hinted at removing 25% tariffs as India’s Russian oil purchases “collapsed.” This signal suggests a major trade deal between Modi and Trump. Story first published: Saturday, January 24, 2026, 17:05 [IST] Other articles published on Jan 24, 2026
